என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்தியாவின் வெற்றிக்கு உதவிய தென் ஆப்பிரிக்காவின் Extras- சுவாரஸ்ய பின்னணி
- இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 17 ரன்களில் தோல்வியடைந்தது.
- தென்ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்தில் எக்ஸ்டிரா வகையில் 14 வைடு உள்பட 23 ரன்களை வாரி வழங்கியது.
ராஞ்சி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.
அதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று அரங்கேறியது.
'டாஸ்' ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம், இரவு பனியின் தாக்கத்தை மனதில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 349 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 11 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் தென்ஆப்பிரிக்க பேட்டர்கள் மனம் தளரவில்லை. விக்கெட் சரிவுக்கு மத்தியிலும் இடைவிடாது ரன்வேட்டை நடத்தினர். டோனி டி ஜோர்ஜி (39 ரன்), டிவால்ட் பிரேவிஸ் (37 ரன்), மார்கோ யான்சென் (70 ரன், 39 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), மேத்யூ பிரீட்ஸ்கே (72 ரன், 80 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவர்களுக்கு நம்பிக்கை அளித்தனர்.
இதனால் ஆட்டம் எந்த பக்கம் போகும் என்பதை கணிக்க முடியாததால் கடைசி வரை துளியும் பரபரப்புக்கு குறைவில்லாமல் சென்றது. இறுதிகட்டத்தில் ஆக்ரோஷமாக ஆடிய ஆல்-ரவுண்டர் கார்பின் பாஷ் இந்திய பவுலர்களை மிரள விட்டார். இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 18 ரன் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. பரபரப்பான கடைசி ஓவரை வேகப்பந்து விச்சாளர் பிரசித் கிருஷ்ணா வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்காத கார்பின் பாஷ் (67 ரன், 51 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) அடுத்த பந்தை தூக்கியடித்தார். அதை ரோகித் சர்மா லாவகமாக கேட்ச் செய்தார்.
இதனால் தென்ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெற்றி தோல்விக்கு முக்கிய பங்கு வகித்த எக்ஸ்டிரா ரன்கள். அதன்படி தென்ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்தில் எக்ஸ்டிரா வகையில் 14 வைடு உள்பட 23 ரன்களை வாரி வழங்கியது. ஆனால் இந்தியா எக்ஸ்டிராவாக வெறும் 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தது. அதாவது தென்ஆப்பிரிக்கா 17 ரன்களை கூடுதலாக வழங்கியிருந்தது. கடைசியில் அதே 17 ரன் வித்தியாசத்தில் தான் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.






