என் மலர்
கிரிக்கெட் (Cricket)

முதல் சதத்தை அடித்தது அற்புதமான அனுபவம்- முத்துசாமி நெகிழ்ச்சி
- இந்தியாவில் எனக்கு கிடைத்த வாய்ப்புக்காக நன்றி தெரிவிக்கிறேன்.
- முதல் இன்னிங்சில் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது சிறந்ததாக இருந்தது.
கவுகாத்தி:
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த தவறி விட்டனர்.
முதல்நாள் ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்து இருந்தது. நேற்றைய 2-வது நாளில் எஞ்சிய 3 விக்கெட்டுகளை எளிதில் கைப்பற்ற தவறி விட்டனர். இதனால் 489 ரன்களை அந்த அணி குவித்து விட்டது.
இந்திய பந்து வீச்சாளர்களுக்கு செனுரான் முத்துசாமி சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அவருக்கு யான்சென் மிகவும் உதவியாக இருந்தார். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட முத்துசாமி 109 ரன்கள் எடுத்தார். தனது 8-வது டெஸ்டில் விளையாடும் அவர் முதல் சதத்தை பதிவு செய்தார். கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக 89 ரன் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
முதல் சதம் அடித்தது குறித்து முத்துசாமி நேற்றைய போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல் சதத்தை பதிவு செய்தது அற்புதமான அனுபவமாகும். 2019-ல் நாங்கள் இந்தியாவில் டெஸ்ட் தொடரை மோசமாக இழந்த பிறகு நான் உள்நாட்டு போட்டியில் விளையாடி தேசிய அணியில் மீண்டும் இடம் பிடித்தேன்.
இந்தியாவில் எனக்கு கிடைத்த வாய்ப்புக்காக நன்றி தெரிவிக்கிறேன். முதல் இன்னிங்சில் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது சிறந்ததாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முத்துசாமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை 2-வது டெஸ்டில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் தொட ரில் அவர் தொடர் நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






