என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கில்லுக்கு பதில் அந்த வீரரை டி20 கேப்டனாக நியமிக்கலாம்- ராபின் உத்தப்பா யோசனை
- ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் கில் கேப்டனாக தேர்ந்தெடுக்க சரியானவர் என்று நினைக்கிறேன்.
- முதலில் சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் தமக்கான இடத்தை சம்பாதிக்க வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவ கேப்டனாக சுப்மன் கில் வளர்க்கப்பட்டு வருகிறார். ரோகித் சர்மா ஓய்வுக்குப் பின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் அவரை துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்த தேர்வுக்குழு ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு கேப்டனாக நியமித்துள்ளது.
இந்நிலையில் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் சுப்மன் கில் கேப்டனாக செயல்படத் தகுதியானவர் என்றும் ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஷ்ரேயாஸ் ஐயர் தான் இந்தியாவை கேப்டனாக தலைமைத் தாங்க சரியானவர் என்றும் முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் கில் கேப்டனாக தேர்ந்தெடுக்க சரியானவர் என்று நினைக்கிறேன். அதற்குத் தகுதியானவர் என்பதை அவரும் காண்பித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய நம்பர்கள் நன்றாக இருக்கிறது. இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் ஷ்ரேயாஸ் ஐயரை அவர்கள் கேப்டனாக்க பார்க்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
முதலில் சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் தமக்கான இடத்தை சம்பாதிக்க வேண்டும். ஏனெனில் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் தங்களுடைய வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். சஞ்சு சாம்சன் இடம் மாற்றப்பட்டுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயரும் தம்முடைய வாய்ப்புக்காக காத்திருக்கிறார். சுப்மன் கில் நன்மைக்காக ஆசியக் கோப்பை அவருக்கு நன்றாக சென்றிருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அபிஷேக் மட்டுமே சிறப்பாக விளையாடியதால் 2-வது ஓப்பனிங் இடம் இப்போதும் காலியாகவே இருக்கிறது.
அங்கே ஜெய்ஸ்வால், சாம்சன் போன்றவர்கள் விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன். கில் தன்னுடைய இடத்தை பிடிக்க வேண்டும். அவர் கேப்டன் என்பதற்காக இடத்தைக் கொடுக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. சொல்லப்போனால் இந்திய கிரிக்கெட் இப்போதெல்லாம் ஒரே நாள் இரவில் மாறக்கூடியதாக இருக்கிறது. துணைக் கேப்டன் என்பது உறுதியான பொறுப்பல்ல. இந்திய அணியில் நிறைய துணைக் கேப்டன்கள் இருக்கிறார்கள் அல்லவா.
என்று உத்தப்பா கூறினார்.






