என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தென்ஆப்பிரிக்கா ஏ-வுக்கு எதிரான டெஸ்ட்: தொடர்ந்து பந்து தாக்கியதால் வெளியேறிய ரிஷப் பண்ட்
- தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
- காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.
இந்தியா 'ஏ'- தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2ஆவது டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 255 ரன்களிலும், தென்ஆப்பிரிக்கா 221 ரன்களிலும் ஆட்டமிழந்தன.
இதனைத்தொடர்ந்து 34 ரன்கள் முன்னிலையில் இந்தியா 'ஏ' 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 'ஏ' 3 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 26 ரன்களுடனும், குல்தீப் யாதவ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல். ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார்.
இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என தனது ரன் கணக்கை தொடங்கினார். இருந்த போதிலும், வேகப்பந்து வீச்சாளர் டிஷெபோ மொரேகி பந்தில் ரிஷப் பண்ட் அடிக்கடி அடி வாங்கினார். குறிப்பாக மூன்று முறை உடல் மற்றும் ஹெல்மேட்டை பந்து பலமாக தாக்கியது.
இருந்தாலும் தொடர்ந்து விளையாட முடிவு செய்தார். ஆனால் ஒவ்வொரு பந்தையும் சந்திக்கும்போது வலி ஏற்படுவதுபோல் உடல்களை அசைத்தார். இதனால் பயிற்சியாளர் மற்றும் பிசியோ ஆகியோர் இதற்கு மேல் களத்தில் நின்றால் காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என முன்னெச்சரிக்கையாக அவரை வெளியேறும்படி வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் களத்தில் இருந்து வெளியேறினார். இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. 2ஆவது டெஸ்ட் 22-ந்தேதி தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து, ரிஷப் பண்ட் கால் பாதத்தை பலமாக தாக்கியது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் இந்தியா 'ஏ' அணியில் இடம் பிடித்தார்.






