என் மலர்
கிரிக்கெட் (Cricket)

என்னால் நம்பமுடியவில்லை.. ரோகித் நம்பர் ஒன் இடம் முன்னேறியது குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கருத்து
- ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோகித் முதலிடத்தை பிடித்துள்ளார்.
- 18 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையில் தனது 38-வது வயதில் முதலிடத்தை பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
லண்டன்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.). ஒருநாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிகளில் முறையே 73 மற்றும் 121 ரன்கள் விளாசியதன் மூலம் 36 புள்ளிகள் கூடுதலாக சேகரித்த ரோகித் சர்மா மொத்தம் 781 புள்ளிகளுடன் இரு இடம் உயர்ந்து 'நம்பர் 1' அரியணையில் அமர்ந்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் அவர் முதலிடத்தை அலங்கரிப்பது இதுவே முதல் முறையாகும். 18 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையில் தனது 38-வது வயதில் முதலிடத்தை பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். மேலும் ஒட்டுமொத்த ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் அதிக வயதில் முதலிடத்தை பிடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
ரோகித் சர்மா தனது 38-வது வயதில் ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்தது தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திருப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
என்னால் இந்த செய்தியை நம்பவே முடியவில்லை . ரோகித் சர்மா நம்பர் 1 இடத்தை பிடித்து விட்டார் என்று சொன்னவுடன் என் மனதில் தோன்றிய முதல் கேள்வி. ஏன் இதற்கு முன்பு அவர் நம்பர் 1 இடத்தை பிடித்ததே இல்லையா? என்பதுதான். ஆனால் பலரும் இப்போதுதான் ரோகித் சர்மா நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறார் என்று கூறினார்கள்.
இது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. அவர் எனக்குத் தெரிந்து நீண்ட காலமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதம் அடித்திருக்கின்றார்.
இவ்வளவு செய்தும் ரோகித் சர்மா நம்பர் 1 இடத்தை பிடிக்கவில்லையா? என்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 15 ஆண்டுகளாக எந்த அளவுக்கு வீரர்கள் விளையாடியிருப்பார்கள் என்பதை யோசிக்க வேண்டும் என நினைக்கின்றேன். ரோகித் சர்மா ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் மிகவும் பிரம்மாண்டமான வீரர். அவர் உலகின் முதல் இடத்திற்கு தகுதியானவர்.
என்று கூறினார்.






