என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடரை எந்த அணி கைப்பற்றும்: ஸ்டெய்ன்- கிளார்க் கணிப்பு
- முதல் முறையாக கேப்டன் பொறுப்பை வகிக்கும் சுப்மன் கில்லுக்கு இந்த தொடர் அனுபவத்தை அளிக்கும்.
- 5 டெஸ்ட் போட்டியும் பரபரப்பாக இருக்கும். எல்லாவற்றுக்கும் முடிவு ஏற்படும்.
புதுடெல்லி:
சுப்மன்கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ந்தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. விராட்கோலி, ரோகித்சர்மா, அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு முதல் முறையாக இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று தென்ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீரர் ஸ்டெய்ன் கணித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
5 டெஸ்ட் போட்டியும் பரபரப்பாக இருக்கும். எல்லாவற்றுக்கும் முடிவு ஏற்படும். இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது. எந்த அணியும் எளிதில் வெற்றி பெற முடியாது. 5 டெஸ்டும் மிகவும் நெருக்கமாக இருக்கும்.
முதல் முறையாக கேப்டன் பொறுப்பை வகிக்கும் சுப்மன் கில்லுக்கு இந்த தொடர் அனுபவத்தை அளிக்கும். கடினமான சூழலை ஏற்படுத்தும்.
இவ்வாறு ஸ்டெய்ன் கூறியுள்ளார்.
அதேநேரத்தில் இங்கிலாந்து அணிக்கு இந்தியா சவால் அளிக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் அனுபவம் மிகுந்த வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இல்லை. அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் குறைந்த டெஸ்ட் போட்டியில் விளையாடியவர்கள்.
அதே நேரத்தில் பந்துவீச்சில் எதிர் அணியை நிலைகுலையச் செய்ய பும்ரா இருக்கிறார். அவர் எப்படி செயல்படபோகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். அணியில் இளம் வீரர்கள் இருக்கிறார்கள். எனவே இங்கிலாந்துக்கு இந்திய அணி நிச்சயம் சவால் அளிக்கும். சாய் சுதர்ஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் சறப்பாக செயல்படுவார்கள்.
இவ்வாறு மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.






