என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் கேப்டன்?
- ஜெமிமா ரோட்ரிக்ஸ் இந்திய அணியையோ அல்லது டெல்லி கேபிடல்ஸ் அணியையோ கேப்டனாக வழிநடத்திய அனுபவம் கிடையாது.
- கடந்த 3 சீசன்களாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
புதுடெல்லி:
5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி ஜனவரி 9-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை நவி மும்பை, வதோராவில் நடைபெறுகிறது. இதற்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோவில் இன்று மாலை 6 மணிக்கு மிகப்பெரிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
25 வயதாகும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இந்திய அணியையோ அல்லது டெல்லி கேபிடல்ஸ் அணியையோ கேப்டனாக வழிநடத்திய அனுபவம் கிடையாது. மெக்லேனிங் டெல்லி அணியில் இருந்து உ.பி. வாரியர்சில் இணைந்ததால், புதிய கேப்டனாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வர்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார். உலக கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேற காரணமாக இருந்த அவர் டெல்லி அணியின் கேப்டன் வாய்ப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் இந்திய வீராங்கனை ஒருவரையே புதிய கேப்டனாக நியமிக்க ஆர்வம் காட்டி வருகிறது.
கடந்த 3 சீசன்களாக டெல்லி அணிக்காக ஆடி வரும் ஜெமிமா ரோட்ரிக்ஸ், 27 போட்டிகளில் 507 ரன்கள் எடுத்துள்ளார். உலக கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல அவர் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






