என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இளையோர் உலக கோப்பை அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது இந்தியா
- இந்தியா அணியுடன் நியூசிலாந்து, வங்கதேசம், அமெரிக்கா ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன.
- ஜப்பான், தான்சானியா அணிகளும் விளையாட தகுதி பெற்றுள்ளன.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை (U-19 World Cup) கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் அடுத்த வருடம் ஜனவரி 15ந்தேதி முதல் பிப்ரவரி 6-ந்தேதி வரை 23 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. 16 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரிவில் 4 அணிகள் இடம் பிடித்துள்ளது. இந்தியா குரூப் ஏ-யில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் அமெரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் இடம் பிடித்துள்ளனர்.
இந்த நிலையில்தான் இந்தத் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியி்டுள்ளது. ஜனவரி 15-ந்தேதி இந்தியா முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. வங்கதேசத்தை 17-ந்தேதியும், நியூசிலாந்தை 24-ந்தேதியும் எதிர்கொள்கிறது. இந்தியா மோதும் போட்டிகள் ஜிம்பாப்வேயில் உள்ள புலவாயோவில் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடக்கிறது.
குரூப் நிலையில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் சிக்ஸ் நிலைக்கு தகுதி பெறும். இங்கு 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். அதன்பின் அரையிறுதி, இறுதிப் போட்டி நடைபெறும்.






