என் மலர்
கிரிக்கெட் (Cricket)

உலகின் உயரிய விளையாட்டு விருதுக்கு இந்திய மகளிர் அணி பரிந்துரை
- இந்தப் பிரிவில் இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணி உள்பட 5 அணிகள் இந்தியாவுடன் போட்டியிடுகின்றன.
- இந்த விருதுகளுக்கான வெற்றியாளர்கள் வரும் ஏப்ரல் 20 அறிவிக்கப்படுவார்கள்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, உலகின் உயரிய விளையாட்டு விருதாகக் கருதப்படும் லாரியஸ் உலக விளையாட்டு விருதுகளில் (Laureus World Sports Awards) முக்கியப் பிரிவுகளில் ஒன்றான 'ஆண்டின் சிறந்த அணி' விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 'ஆண்டின் சிறந்த அணி' விருதுக்குத் தேர்வாகியுள்ள முதல் மகளிர் கிரிக்கெட் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
2025-ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா முதல்முறையாகச் சாம்பியன் பட்டம் வென்றது.
2026-ஆம் ஆண்டிற்கான இந்தப் பிரிவில் இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணி, மெக்லாரன் ஃபார்முலா 1 அணி, ஐரோப்பிய ரைடர் கோப்பை அணி, ஓக்லஹோமா சிட்டி தண்டர் மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (கால்பந்து) ஆகிய அணிகள் இந்தியாவுடன் போட்டியிடுகின்றன.
இந்த விருதுகளுக்கான வெற்றியாளர்கள் வரும் ஏப்ரல் 20, 2026 அன்று ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படுவார்கள்.






