என் மலர்
கிரிக்கெட் (Cricket)

லார்ட்ஸ் டெஸ்ட்: ஒரே ஓவரில் இங்கிலாந்தின் தொடக்க வீரர்களை வீழ்த்திய நிதிஷ் ரெட்டி..!
- 14ஆவது ஓவரிலேயே நிதிஷ் குமார் ரெட்டி பந்து வீச அழைக்கப்பட்டார்.
- டக்கட் மற்றும் கிராவ்லியை முதல் ஓவரிலேயே வீழ்த்தினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் இடம் பெற்றுள்ளார்.
கிராவ்லி, டக்கட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பும்ரா தொடக்க ஓவரை வீசினார். ஆகாஷ் தீப் அவருடன் புதிய பந்தை பகிர்ந்து கொண்டார். இருவரும் அபாரமாக பந்து வீசினர். பந்து நல்லவிதமாக ஸ்விங் ஆனது. ஆனால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இதனால் 14ஆவது ஓவரிலேயே நிதிஷ் குமாரை பந்து வீச அழைத்தார் சுப்மன் கில்.
2ஆவது பந்தில் டக்கட் பவுண்டரி அடித்தார். ஆனால், 3ஆவது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 23 ரன்கள் சேர்த்திருந்தார். அடுத்து ஆலி போப் களம் இறங்கினார். போப் முதல் பந்திலேயே அவட்டாக வேண்டியது, கடினமான கேட்சை சுப்மன் கில் தவறவிட்டார்.
அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். கடைசி பந்தை கிராவ்லி எதிர்கொண்டார். ஆஃப் ஸ்டம்பை ஒட்டி வீசிய பந்து பேட்டில் உரசி விக்கெட் கீப்பரிடம் கேட்சாக மாறியது. கிராவ்லி 18 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள வீழ்த்தி அசத்தினார்.






