என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்; இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா..!
    X

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்; இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா..!

    • சுப்மன் கில் 161 ரன்கள் விளாசினார்.
    • கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா அரைசதம் அடித்தனர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    180 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. கருண் நாயர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி 78 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அருக்கு இணையாக சுப்மன் கில்லும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

    இந்த ஜோடி 4ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டமிழக்காமல் விளையாடியது. இதனால் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 41 (35 பந்துகள்) ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ரிஷப் பண்ட் 48 பந்தில் அரைசதம் அடித்தார். சுப்மன் கில் 57 பந்தில் அரைசதம் அடித்தார். ரிஷப் பண்ட் 65 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜடேஜா களம் இறங்கினார்.

    அரைசதம் அடித்த கில் அதை சதமாக மாற்றினார். அவர் 129 பந்தில் சதம் அடித்தார். மதிய தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 100 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. சுப்மன் கில் மற்றும் ஜடேஜா வாணவேடிக்கை நிகழ்த்தினர். ஜடேஜா 94 பந்தில் அரைசதம் அடித்தார். சுப்மன் கில் 156 பந்தில் 150 ரன்னைத் தொட்டார். 27 பந்தில் 100-ல் இருந்து 150 ரன்னைத் தொட்டார். தொடர்ந்து விளையாடிய அவர் 162 பந்தில் 161 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 411 ரன்கள் குவித்திருந்தது.

    அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். 7ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்தியா 427 ரன்கள் எடுத்திருக்கும்போது 2ஆவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜடேஜா 69 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    ஒட்டுமொத்தமாக இந்தியா 607 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

    Next Story
    ×