என் மலர்
கிரிக்கெட் (Cricket)

4-வது வெற்றி ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்சுடன் இன்று மோதல்
- பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
- அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றது.
சேலம்:
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. 11-ந் தேதியுடன் அங்கு 8 போட்டிகள் முடிவடைந்தது 13-ந் தேதி முதல் வாடிப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
நேற்றுடன் 13 ஆட்டங் கள் முடிந்துள்ளன. 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. சேலம் ஸ்பார்டன்ஸ் ( 6 புள்ளி) அதற்கு அடுத்த நிலையில் இருக்கிறது. திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் தலா 4 புள்ளிகளுடனும், மதுரை பாந்தர்ஸ் 2 புள்ளிகளுடனும் உள்ளன. திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ் ஆகியவை 3 போட்டிகளிலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை. இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. திருப்பூரை 8 விக்கெட் வித்தியாசத்திலும், நெல்லையை 41 ரன்கள் வித்தியாசத்திலும், கோவையை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
அந்த அணியில் கேப்டன் பாபா அபராஜித் (166 ரன்), விஜய்சங்கர் (122 ரன், 4 விக்கெட்), ஆஷிக், அபிஷேக் தன்வர் (9 விக்கெட்), ஸ்வப்னில் சிங் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றது. கோவையை 7 விக்கெட் வித்தியாசத்திலும், மதுரையை 9 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. திருப்பூர் அணியிடம் 9 விக்கெட்டில் தோற்றது. அந்த அணி 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.






