என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சாதனை: 7 ஆட்டத்திலும் வென்றது மகிழ்ச்சி- கேப்டன் பாபா அபராஜித்
    X

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சாதனை: 7 ஆட்டத்திலும் வென்றது மகிழ்ச்சி- கேப்டன் பாபா அபராஜித்

    • 2017-ம் ஆண்டு டி.என்.பி.எல். போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி தான் மோதிய 7 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றது.
    • தற்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 7 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்று 2-வது அணி என்ற சாதனையை படைத்தது.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். போட்டியில் 4-வது மற்றும் இறுதி கட்ட ஆட்டங்கள் திண்டுக்கல்லில் நேற்று தொடங்கியது.

    முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது.

    முதலில் விளையாடிய மதுரை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 9.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்து இருந்த போது ஆட்டம் பூச்சிகளின் காரணமாக 20 நிமிடம் தடைப்பட்டது. இதனால் 14 ஓவர்களில் 114 ரன்கள் இலக்கு என மாற்றி அமைக்கப்பட்டது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இந்த ரன்னை எடுத்தது.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் மோதிய 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது. அந்த அணி ஏற்கனவே திருப்பூர் தமிழன்சை 8 விக்கெட் வித்தியாசத்திலும், நெல்லை ராயல் கிங்சை 41 ரன் வித்தியாசத்திலும், கோவை கிங்சை 8 விக்கெட்டிலும், திண்டுக்கல் டிராகன்சை 8 ரன் வித்தியாசத்திலும், சேலம் ஸ்பார்டன்சை 6 விக்கெட்டிலும், திருச்சி கிராண்ட் சோழாசை 4 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.

    2017-ம் ஆண்டு டி.என்.பி.எல். போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி தான் மோதிய 7 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு தற்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 7 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்று 2-வது அணி என்ற சாதனையை படைத்தது.

    மதுரை அணியை வீழ்த்தியது குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் பாபா அபராஜித் கூறியதாவது:-

    7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. லீக் சுற்றின் அனைத்து போட்டிகளிலும் வென்றது மிகுந்த திருப்தியாக இருக்கிறது. இதற்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம். இதற்கு அனைத்து வீரர்களும் தான் காரணமாகும்.

    எங்களது பந்துவீச்சு நன்றாக இருக்கிறது. சிலம்பரசன், விஜய் சங்கர் அபாரமாக வீசினார்கள். பிளே ஆப் சுற்றில் விளையாடும் இந்த நேரத்தில் ஒவ்வொரு துறைகளிலும் இன்னும் சிறிது முன்னேற்றம் காண வேண்டும். 'குவாலிபையர்1' போட்டியில் விளையாட இன்னும் 2 நாட்கள் ஓய்வு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஆட்டநாயகன் விருது பெற்ற விஜய் சங்கர் கூறும் போது,

    பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு முன் வெற்றி பெறுவது எங்களுக்கு மிகவும் முக்கியம். நாங்கள் விளையாடிய 7 லீக் போட்டிகளிலும் வென்று முதலிடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளிலும் வெல்லும் முனைப்புடன் உள்ளோம்" என்றார்.

    விஜய் சங்கர் 3 விக்கெட் வீழ்த்தி 28 ரன் எடுத்தார்.

    2-வது ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 68 ரன் வித்தியாசத்தில் சேலத்தை தோற்கடித்து ஆறுதல் பெற்றது. இந்த தோல்வியால் மதுரை அணி வாய்ப்பை இழந்து வெளியேறிது.

    * * *விக்கெட் கைப்பற்றிய மகிழ்ச்சியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள்.

    Next Story
    ×