என் மலர்
கிரிக்கெட் (Cricket)

4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
- அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ் 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- இந்திய தரப்பில் வருண், குல்தீப், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் சுப்மன் கில் 6 பந்துகள் சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்தார். அதனை தொடர்ந்து 10 பந்துகளில் 5 எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் திலக் வர்மா டக் அவுட்டிலும் நடையை கட்டினார்.
இதனால் பவர் பிளேயில் இந்திய அணி 40 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து அபிஷேக் சர்மாவும் அக்சர் படேலும் நிதானமாக விளையாடினர். இதில் அக்சர் படேல் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
ஹர்ஷித் ராணா - அபிஷேக் சர்மா ஜோடி நல்ல பாட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய அபிஷேக் அரைசதம் அடித்து அசத்தினார். ராணா 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த துபே 4 ரன்னில் வெளியேறினார்.
ஒரு முனையில் போராடிய அபிஷேக் 68 ரன்னில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 18.4 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும் எல்லீஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ராணா இவர்களை தவிர மற்ற எந்த வீரரும் இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட்- மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 28 ரன்கள் இருக்கும் போது டிராவிஸ் ஹெட் அவுட் ஆனார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் குல்தீப் யாதவின் ஒரே ஓவரில் 20 ரன்கள் குவித்து அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து டிம் டேவிட் 1, இங்கிலீஸ் 20, என விக்கெட்டுகளை இழந்தனர். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 14, ஷார்ட் 0 என அடுத்தடுத்து பும்ரா வீசிய பந்தில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் வருண், குல்தீப், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நவம்பர் 2-ந் தேதி நடக்கவுள்ளது.






