என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாளை மோதல்
    X

    ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாளை மோதல்

    • இந்திய அணி அதிகபட்சமாக 8 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது.
    • இலங்கை 6 தடவையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டம் பெற்று உள்ளன.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை போட்டி (20 ஓவர்) இன்று தொடங்கி 28-ந்தேதி வரை துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் விளையாடும் 4 அணிகளும் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    அபுதாபியில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஆங்காங் அணிகள் மோதுகின்றன. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை நாளை (10-ந்தேதி) எதிர்கொள்கிறது. துபாயில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    இந்திய அணி ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.

    டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் 20 ஓவர் அணிக்கு துணை கேப்டனாக தேர்வு பெற்றுள்ளார். இதனால் வீரர்கள் தேர்வு சவாலாக இருக்கும். அபிஷேக் சர்மாவுடன் இணைந்து சுப்மன் கில் தொடக்க வரிசையில் ஆடுவார். விக்கெட் கீப்பர் வாய்ப்பில் சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா இடையே போட்டி நிலவுகிறது. இதில் ஜிதேஷ் சர்மா முதல் தேர்வாக இருப்பார் என்று கருதப்படுகிறது.

    சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் 3-வது வரிசையில் ஆடுவாரா? அல்லது 5-வது நிலையில் ஆடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல் ஆகியோரும் அணியில் இடம்பெறுவார்கள். வேகப்பந்தில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்கும், சுழற்பந்தில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தியும் தேர்வு பெறுவார்கள்.

    இந்திய அணி கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடியது.

    சொந்த மண்ணில் நடந்த 5 போட்டிக் கொண்ட தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் ஆசிய கோப்பையில் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.

    முகமது வாசிம் தலைமையிலான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விளையாடும் வேட்கையில் உள்ளது. அந்த அணி சமீபத்தில் நடைபெற்ற 3 நாடுகள் போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட வெல்லவில்லை. தான் மோதிய 4 ஆட்டத்திலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிடம் தோற்றது.

    இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் மோதியுள்ளன. 2016-ம் ஆண்டு மிர்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப் படுகிறது.

    இந்திய அணி அதிகபட்சமாக 8 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது. இலங்கை 6 தடவையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டம் பெற்று உள்ளன.

    Next Story
    ×