என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: ரசிகர்களின் மனதில் அழியாத சிறந்த தருணங்கள்..!
- பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி 183 ரன்கள் விளாசி, இந்திய அணியை வெற்றி பெற வைத்திருப்பார்.
- சச்சின் தனது 100ஆவது சதத்தை பதிவு செய்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நான்கு அணிகள் இடம் பிடித்துள்ளன. "பி" பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் அதே பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.
இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இதில் நான்கு அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்தியா- பாகிஸ்தான் போட்டி வருகிற 14ஆம் தேதி துபாயில் நடக்கிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாறு
தற்போது நடைபெறும் ஆசிய கோப்பை 17ஆவது தொடராகும். இது டி20 கிரிக்கெட் வடிவிலானது. இதற்கு முன்னதாக இரண்டு முறை மட்டுமே டி20 வடிவில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றுள்ளது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரை இந்தியா வென்றது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரை இலங்கை வென்றது.
இந்திய அணியின் நட்சத்திர கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனியின் தலைமையில் 50 ஓவர் மற்றும் 20 வடிவிலான தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ரசிகர்கள் மனதில் அழியாத சிறந்த நினைவுகளை இதில் காண்போம்.
2012ஆம் ஆண்டு தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 183 ரன்கள் விளாசிய விராட் கோலி
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முகமது ஹபீஸ் (106), நஷீர் ஜாம்ஷெத் (112) ஆகியோரின் சதங்களால் 329 ரன்கள் குவித்தது. பின்னர் 330 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் கம்பீர் டக்அவுட் ஆனார். சச்சின் தெண்டுல்கர் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். 3ஆவது வீரராக களம் இறங்கிய விராட் கோலி 148 பந்தில் 22 பவுண்டரி, 1 சிக்சருடன் 183 ரன்கள் குவித்தார். இவரது சதத்தால் இந்தியா 47.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்றது.
சர்வதேச கிரிக்கெட்டில் 100ஆவது சதத்தை நிறைவு செய்த சச்சின் தெண்டுல்கர் (2012)
2012 ஒருநாள் வடிவிலான ஆசிய கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் சச்சின் 114 ரன்கள் விளாசினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த வீரர் என்ற இமாலய சாதனையை படைத்தார். 99ஆவது சதத்தில் இருந்து 100ஆவது சதத்தை அடிக்க சச்சின் தெண்டுல்கருக்கு 12 மாதங்கள் தேவைப்பட்டது.
2018ஆம் ஆண்டில் டையில் முடிவடைந்த இந்தியா- ஆப்கானிஸ்தான் போட்டி
50 ஓவர் வடிவில் நடைபெற்ற இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த தொடரில் விராட் கோலி விளையாடவில்லை. இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. டோனி கேப்டனாக செயல்பட்டார். முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் அடித்தது, பின்னர் 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இந்திய அணியாலும் 252 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் போட்டி டையில் முடிவடைந்தது. இந்த போட்டியின் வெற்றித் தோல்வி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இந்திய அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
2008ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் அஜந்தா மெண்டிஸ் சுழலில் வீழ்ந்த இந்தியா
2008ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் சனத் ஜெயசூர்யா (125) சதம் அடிக்க இலங்கை 273 ரன்கள் விளாசியது. பின்னர் 274 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா, அஜந்தா மெண்டிஸ் சுழற்பந்து வீச்சில் சிக்கித் திணறியது. அஜந்தா மெண்டிஸ் 8 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இதனால் இந்தியா 39.3 ஓவரிலேயே 173 ரன்னில் சுருண்டு 100 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. விரேந்தர் சேவாக் அதிகபட்சமாக 60 ரன்களும், எம்எஸ் டோனி 49 ரன்களும் அடித்தனர்.
2012 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் 2 ரன்களில் வெற்றி நழுவ விட்ட வங்கதேசம்
50 ஓவரில் வடிவில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 236 ரன்கள் சேர்த்தது. பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களம் இறங்கியது. வங்கதேசம் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து பெரும் ஏமாற்றம் அடைந்தது.
இந்தியா- வங்கதேசம் இறுதிப் போட்டியில் இந்தியா கடைசி பந்தில் த்ரில் வெற்றி
50 ஓவர் வடிவிலான இறுதிப் போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து 222 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. வங்கதேசம் நேர்த்தியாக பந்து வீசியதால் இந்திய வீரர்களால் ரன்கள் குவிக்க இயலவில்லை. கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் லெக்-பை மூலம் ஒரு ரன் கடைக்க இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
2014-ல் இந்தியா- பாகிஸ்தான் மோதிய போட்டி
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் அடித்தது. பின்னர் 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தான் களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்திருந்தது. 39 பந்தில் 46 ரன்கள் தேவைப்பட்டது. ஷாகித் அப்ரிடி அபாரமாக விளையாடி 18 பந்தில் 34 ரன்கள் விளாசினார். கடைசி 3 பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், அஸ்வின் பந்தில் சிக்ஸ் விளாசி அப்ரிடி பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்திருப்பார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி, அன்றைய தினம் இந்தியாவுக்கு சிறந்ததாக அமையவில்லை.
2008-ல் பாகிஸ்தானுக்கு எதிராக சிக்ஸ் அடித்து வெற்றி பெற வைத்த ஹர்பஜன் சிங்
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி, இறுதி போட்டி இல்லை என்றாலும் அந்த அளவிற்கு பார்க்கப்பட்ட போட்டியாக அமைந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 267 ரன்கள் அடித்தது. இந்தியா சேஸிங்கில் ரன்களை நெருங்கிய போதும், விக்கெட்டுகளை இழந்தது.
இரண்டு பந்தில் 4 ரன்களை தேவைப்பட்டது, முகமது ஆமிர் பந்தை சிக்சருக்கு விளாசி ஹர்பஜன் சிங் அணியை வெற்றி பெற வைப்பார். இந்த வெற்றி மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி 15 வருடத்திற்குப் பிறகு ஆசிய கோப்பையை வென்றது.






