என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முதல் முறையாக டி20 உலகக் கோப்பை வெல்லப்போவது யார்? நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
    X

    முதல் முறையாக டி20 உலகக் கோப்பை வெல்லப்போவது யார்? நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்

    • துபாய் ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டதாகும்.
    • இங்கு 150 ரன்கள் எடுத்தாலே சவாலான ஸ்கோராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து (ஏ பிரிவு), வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா (பி பிரிவு) தங்கள் பிரிவில் முறையே 'டாப்-2' இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

    முதலாவது அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்தும், 2-வது அரைஇறுதியில் நியூசிலாந்து 8 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்குள் அடியெடித்து வைத்தன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று இரவு நடக்கிறது. இதில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    நியூசிலாந்து அணி 3-வது முறையாக (2009, 2010, 2024) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அந்த அணி லீக் சுற்றில் 3 வெற்றி (இந்தியா, இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிராக), ஒரு தோல்வி (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) கண்டது. அரைஇறுதியில் வெஸ்ட்இண்டீசை விரட்டியடித்தது.

    நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் ஜார்ஜியா பிலிமெர், சுசி பேட்ஸ், கேப்டன் சோபி டிவைனும், பந்து வீச்சில் ஈடன் கார்சன், ரோஸ்மேரி மைர், லீ தஹூஹூவும் வலுசேர்க்கிறார்கள். ஆல்-ரவுண்டராக அமெலியா கெர் அசத்துகிறார்.

    தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 2-வது தடவையாக இறுதிப்போட்டியை எட்டி இருக்கிறது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து கோப்பையை தவறவிட்டு இருந்தது. லீக் சுற்றில் 3 வெற்றி (வெஸ்ட்இண்டீஸ், ஸ்காட்லாந்து, வங்காளதேசத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (இங்கிலாந்துக்கு எதிராக) கண்டு இருந்த தென்ஆப்பிரிக்க அணி அரைஇறுதியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு ஆப்பு வைத்தது.

    தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் கேப்டன் லாரா வோல்வார்ட், தஸ்மின் பிரிட்ஸ், அன்னேக் போஷ்சும், பந்து வீச்சில் மிலாபாவும், ஆல்-ரவுண்டராக மரிஜானா காப்பும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்து வீச்சில் அந்த அணி இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

    இந்த தொடரில் ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ள இவ்விரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் யார் வாகை சூடுவார்கள் என்பதை கணிப்பது கடினம். அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவை சாய்த்த நம்பிக்கையுடன் தென்ஆப்பிரிக்க அணி களம் இறங்குகிறது. முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    துபாய் ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டதாகும். இங்கு 150 ரன்கள் எடுத்தாலே சவாலான ஸ்கோராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் சர்வதேச போட்டியில் 16 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் 11-ல் நியூசிலாந்தும், 4-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    Next Story
    ×