search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கேஎல் ராகுல்
    X
    கேஎல் ராகுல்

    20 ரன்கள் அதிகமாக கொடுத்துவிட்டோம் - தோல்வி குறித்து லோகேஷ் ராகுல் கருத்து

    டாப் வரிசையில் மூன்று முதல் நான்கு வீரர்களில் ஒருவர் நீண்ட இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்று லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் கூறியுள்ளார்.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 18 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. முதலில் விளையாடிய பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்தது. கேப்டன் டுபெலிசிஸ் 64 பந்தில் 96 ரன் எடுத்தார்.

    பின்னர் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தது. அந்த அணியால் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 163 ரன்னே எடுக்க முடிந்தது. குர்னால் பாண்ட்யா 42 ரன்னும், கேப்டன் லோகேஷ் ராகுல் 30 ரன்னும் எடுத்தனர். பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட் கைப்பற்றினார்.

    வெற்றி குறித்து பெங்களூரு கேப்டன் டுபெலிசிஸ் கூறியதாவது:-

    மைதானம் பெரிதாக இருப்பதால் நீங்கள் நிறைய இரண்டு ரன்களை ஓடி எடுக்க வேண்டும். இது கொஞ்சம் சோர்வாக இருக்கும். ஆனால் உங்கள் உடற் தகுதியை மேம்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும். எனது ஐ.பி.எல். சதம் இன்னும் இருப்பதாக உணர்கிறேன்.

    இப்போட்டியில் நாங்கள் சிக்கலில் இருந்தோம். கடந்த மூன்று அல்லது நான்கு ஆட்டங்களில் இருந்ததை போலவே இருந்தோம். ஆனால் யாராவது ஒருவர் நிலைத்து நின்று இன்னிங்சை உறுதிப்படுத்துகிறார்கள். இதனால் நாங்கள் மிகவும் ஆபத்தான அணியாக இருக்கிறோம். இன்று என்னால் அணிக்காக அதை செய்ய முடிந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். நான் ரன்களை எடுக்க ஆர்வமாக இருக்கிறேன். சில ஆட்டங்களில் ரன் குவிக்காததால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினேன் என்றார்.

    லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-

    முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு நாங்கள் நன்றாக தொடங்கினோம் என்று நினைக்கிறேன். பவர் பிளேவில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். இந்த ஆடுகளத்தில் 180 ரன் இலக்கு என்பது 15 முதல் 20 ரன் வரை கூடுதலாக இருந்தது. இந்த கூடுதல் ரன்களை நாங்கள் கொடுத்து விட்டோம். தொடக்கத்தில் நல்ல முன்னேற்றங்களை பெற்றோம். ஆனால் மிடில் ஓவரில் அதை தக்க வைக்க முடியவில்லை.

    டாப் வரிசையில் மூன்று முதல் நான்கு வீரர்களில் ஒருவர் நீண்ட இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்.அவருடன் மற்ற பேட்ஸ்மேன்கள் விளையாட வேண்டும். ஆனால் எங்களால் அதை செய்ய முடியவில்லை. எங்களால் பாட்னர்ஷிப்களை உருவாக்க முடியவில்லை.

    நாங்கள் சிறந்த அணியாக இருக்கிறோம். நாங்கள் விளையாடும் விதத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். சில ஆட்டங்களில் நாங்கள் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். தொடக்கத்தில் எதிரணியை நெருக்கடிக்கு உள்ளாக்கினோம். ஆனால் அதை சிறிது நேரம் தக்க வைக்க முடியவில்லை.

    பெங்களூரு அணி 5-வது வெற்றியை (7 ஆட்டம்) பெற்றது. லக்னோ 3-வது தோல்வியை (7 ஆட்டம்) சந்தித்தது.

    Next Story
    ×