search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    ரன்அவுட்டுகள் பாதிப்பை ஏற்படுத்தியது - மும்பை கேப்டன் ரோகித் சர்மா கருத்து

    மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 5-வது தோல்வியை சந்தித்தது. அந்த அணி தொடர்ச்சியாக முதல் 5 ஆட்டத்தில் தோல்வியை தழுவுவது இது 2-வது முறையாகும்.
    புனே:

    ஐ.பி.எல் போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் சோகம் தொடர்கிறது. அந்த அணி பஞ்சாபிடமும் வீழ்ந்து 5-வது தோல்வியை தழுவியது.

    புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன் குவித்தது.

    ஷிகர் தவான் 50 பந்தில் 70 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் மயங்க் அகர்வால் 32 பந்தில் 52 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), ஜிதேஷ் சர்மா 15 பந்தில் 30 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். பசலி தம்பிக்கு 2 விக்கெட் கிடைத்தது.

    பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு ‌ 186 ரன் எடுத்தது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பிரேவிஸ் 25 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர் ), சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 43 ரன்னும் (1 பவுண்டரி , 4 சிக்சர் ) திலக் வர்மா 20 பந்தில் 36 ரன்னும் ( 3 பவுண்டரி , 2 சிக்சர் ) எடுத்தனர். ஓடியன் சுமித் 4 விக்கெட்டும் , ரபடா 2 விக்கெட்டும் , வைபவ் அரோரா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 5-வது தோல்வியை சந்தித்தது. அந்த அணி தொடர்ச்சியாக முதல் 5 ஆட்டத்தில் தோல்வியை தழுவுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2014-ல் முதல் 5 போட்டியில் தோற்று இருந்தது.

    இந்த தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    நாங்கள் நன்றாக ஆடினோம் என்று தான் நினைத்தேன். மிகவும் நெருங்கி வந்தோம். சில ரன்அவுட்டுகள் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. ஒரு கட்டத்தில் நாங்கள் ரன்ரேட்டை தக்க வைத்தோம். ஆனால் கடைசியில் அது முடியாமல் போனது. பஞ்சாப் அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது.

    பேட்டிங் வரிசையை மாற்றி பார்த்தும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. பேட்டிங்குக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் 190 ரன்னுக்கு மேல் எடுக்க கூடிய இலக்குதான். நாங்கள் குழுவாக சிறப்பாக ஆடவில்லை. இந்த தொடரில் நாங்கள் மிகவும் மோசமாக விளையாடி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பஞ்சாப் அணி 3-வது வெற்றியை பெற்றது. இதன் மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது. அந்த அணி 6-வது ஆட்டத்தில் சன்ரைசஸ் ஐதராபாத்தை வருகிற 17-ந் தேதி சந்திக்கிறது.

    மும்பை இந்தியன்ஸ் அடுத்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை 16-ந் தேதி எதிர்கொள்கிறது.
    Next Story
    ×