என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அதிக விலைக்கு ஏலம் போகும் முக்கிய வீரர்கள்
    X
    அதிக விலைக்கு ஏலம் போகும் முக்கிய வீரர்கள்

    அதிக விலைக்கு போகும் நட்சத்திர வீரர் யார்? நாளை ஐ.பி.எல். வீரர்கள் ஏலம்

    தீபக் சாஹர் அல்லது ‌ஷர்துல் தாகூர் ஆகியோரில் ஒருவரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
    பெங்களூர்:

    15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2-ந் தேதி தொடங்குகிறது. இதில் புதிதாக லக்னோ, சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் (அகமதாபாத்) ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.

    இந்த ஐ.பி.எல். போட்டிக்காக மிகப்பெரிய ஏலம் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 8 அணிகளும் 27 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது.

    சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகியவை தலா 4 வீரர்களையும், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகியவை தலா 3 வீரர்களையும், பஞ்சாப் 2 வீரர்களையும் தக்க வைத்து உள்ளன.

    புதிய அணிகளான லக்னோ, அகமதாபாத் ஆகியவை தலா 3 வீரர்களை ஏலத்துக்கு முன்பே எடுத்துக் கொண்டன. இதுவரை 10 அணிகளிலும் சேர்த்து 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

    ஐ.பி.எல். போட்டிக்கான மெகா ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளையும் (12-ந் தேதி), நாளை மறுநாளும் (13-ந் தேதி) நடக்கிறது. இந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 290 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் இடம்பெற்றுள்ள வீரர்களில் 228 பேர் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள் மீதி உள்ள வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடாத உள்ளூர் மற்றும் புதுமுக வீரர்கள் ஆவார்கள்.

    வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி, ரூ.1½ கோடி, ரூ.1 கோடி, 75 லட்சம், 50 லட்சம், 40 லட்சம், 30 லட்சம், 20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு 46 வீரர்களின் பெயர் உள்ளது.

    இந்த ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு போகும் நட்சத்திர வீரர் யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்ரேயாஸ் அய்யர், டேவிட் வார்னர், இஷான் கி‌ஷன், தீபக் சாஹர், ஜேசன் ஹோல்டர், யசுவேந்திர சாஹல், ரபடா, தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போகலாம். இவர்களை எடுக்க 10 அணிகளும் கடுமையாக போராடும்.

    இது தவிர குயின்டன் டிகாக், நிக்கோலஸ் பூரன், ஷிகர்தவான், அஸ்வின், சுரேஷ் ரெய்னா, ‌ஷர்துல் தாகூர், அம்பதி ராய்டு, படிக்கல், குணால் பாண்ட்யா, ஹர்‌ஷல் படேல், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், முகமது ‌ஷமி ஆகியோர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.

    ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய இளம் வீரர்கள் மீதும் ஐ.பி.எல். ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

    ஒவ்வொரு அணியும் இந்த சீசனில் வீரர்களின் ஏலத்துக்காக ரூ.90 கோடி வரை செலவழிக்கலாம்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்ததன் மூலம் ரூ.42 கோடியை செலவழித்து உள்ளது. இதனால் அந்த அணி எஞ்சிய தொகையான ரூ.48 கோடியை மட்டுமே ஏலத்தில் பயன்படுத்த முடியும். ஏற்கனவே அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. தீபக் சாஹர் அல்லது ‌ஷர்துல் தாகூர் ஆகியோரில் ஒருவரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி திட்ட மிட்டுள்ளதாக தெரிகிறது.

    பஞ்சாப் கிங்ஸ் அணியிடம்தான் ஏலத்தில் எடுக்க அதிக தொகை உள்ளது. அந்த அணியிடம் கைவசம் ரூ.72 கோடி இருக்கிறது.

    டெல்லி அணிக்கு ரூ.47.5 கோடியும், கொல்கத்தா, மும்பை அணிகளுக்கு தலா ரூ.48 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.62 கோடியும், பெங்களூருக்கு ரூ.57 கோடியும், ஐதராபாத்துக்கு ரூ.68 கோடியும் எஞ்சி உள்ளன.

    புதிய அணிகளான லக்னோவிடம் ரூ.58 கோடியும், அகமதாபாத்திடம் ரூ.52 கோடியும் கைவசம் உள்ளன.

    ஐ.பி.எல். ஏலம் நாளை மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த பிரம்மாண்ட ஏல நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    Next Story
    ×