என் மலர்
விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை: இந்தியா 5-வது முறையாக கோப்பையை வெல்லுமா? இங்கிலாந்துடன் நாளை மோதல்
ஆன்டிகுவா:
14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19வயதுக்குட்பட்டோர்) வெஸ்ட் இன்டீசில் நடந்து வருகிறது.
16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடர் அரைஇறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
நடப்பு சாம்பியன் வங்காளதேசம், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உகாண்டா, பப்புவா, நியூ கினியா ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.
முதல் அரை இறுதியில் ஆப்கானிஸ்தானை 15 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. நேற்று முன்தினம் நடந்த 2-வது அரை இறுதியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற் கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி தொடர்ந்து 4-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஒட்டு மொத்தமாக 8-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் (2000, 2006, 2008,2012, 2016, 2018,2020) நுழைந்தது.
கோப்பை யாருக்கு என்பதற்கான இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
4 முறை சாம்பியனான (2000, 2008,2012, 2018) இந்தியா 5-வது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது. யாஷ்துல் தலைமையிலான இந்திய அணியில் ரகுவன்ஷஷி, ஷேக் அஷீத், ஹர்நுர்சிங் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.
இதில் ரகுவன்ஷி 5 ஆட்டத்தில் 278 ரன் எடுத்துள்ளார். அரை இறுதி ஆட்டத்தில் கேப்டன் யாஷ்துல் சதம் அடித்து அசத்தினார். பந்து வீச்சில் ரவிக்குமார், ராஜ்வர்தன், விக்கி ஆஸ்ட்லால், நிஷாந்த் சிந்து ஆகியோர் சிறப்பான நிலையில உள்ளனர்.
பேட்டிங் பந்து வீச்சில் இந்திய அணி சமபலத்துடன் உள்ளது. இங்கிலாந்து அணி பேட்டிங்கில் கேப்டன் டாம் பெர்ஸ்ட் 292 ரன் (5 ஆட்டம்) பெற்றுள்ளார். ஜார்ஜ் தாமஸ், ஜார்ஜ் பெல்ஜேக்கப் பெத்ஹெல், வில்லியம் லக்ஸ்டன் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
பந்து வீச்சில் ஜோஸ்வா பாஸ்டன், ரெஹான் அகமது, தாமஸ் ஸ்பின்வால், ஜேம்ஸ் சேல்ஸ் ஆகியோர் உள்ளனர். இங்கிலாந்து அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த அணி 1998-ம் ஆண்டு கோப்பையை வென்றது. தற்போது 2-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் சமபலத்துடன் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






