search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மெட்வதேவ் - நடால்
    X
    மெட்வதேவ் - நடால்

    21-வது கிராண்ட்சிலாம் வென்று நடால் புதிய வரலாறு படைப்பாரா? மெட்வதேவுடன் நாளை பலப்பரீட்சை

    மெட்வதேவை வீழ்த்துவது என்பது நடாலுக்கு சவாலானது. அவர் கடந்த அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி இருந்தார்.
    மெல்போர்ன்:

    டென்னிசில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட்சிலாம் போட்டியாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் போட்டிகள் நடைபெறும்.

    ரோஜர் பெடரர் (சுவிட்சர் லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்), ஜோகோவிக் (செர்பியா) ஆகிய 3 வீரர்கள் 20 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று முதல் இடத்தில் உள்ளனர்.

    தொடக்கத்தில் அமெரிக்காவை சேர்ந்த பீட் சாம்ராஸ் 14 கிராண்ட் சிலாமுடன் முதலிடத்தில் இருந்தார். அவரது சாதனையை பெடரர் 2009-ல் முறியடித்தார். பெடரரின் இந்த சாதனையை நடால் 2020-ல் சமன் செய்தார்.

    கடந்த ஆண்டு ஜோகோவிச் தொடர்ச்சியாக 3 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்றார். இதன் மூலம் அவர் பெடரர், நடால் ஆகியோருடன் இணைந்தார். கடந்த அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் தோற்றதால் ஜோகோவிச் 21-வது கிராண்ட்சிலாம் சாதனையை தவறவிட்டார்.

    தற்போது நடாலுக்கு 21 -வது கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றி புதிய வரலாறு படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள அவர் 2-வது வரிசையில் உள்ள மெட்வதேவை (ரஷியா) எதிர்கொள்கிறார். இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

    மெட்வதேவை வீழ்த்துவது என்பது நடாலுக்கு சவாலானது. அவர் கடந்த அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி இருந்தார்.

    உலகத் தர வரிசையில் தற்போது 5-வது இடத்தில் இருக்கும் நடால் காயம் மற்றும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு ஆஸ்திரேலிய ஓபனில் சிறந்த நிலைக்கு வந்துள்ளார். இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அவரது 21-வது கிராண்ட்சிலாம் பட்டம் கனவு நனவாகும்.

    35 வயதான நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 13 முறையும் (2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020), அமெரிக்க ஓபன் பட்டத்தை 4 தடவையும் (2010, 2013, 2017, 2019), விம்பிள்டன் பட்டத்தை 2 முறையும் (2008, 2010), ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை ஒரு தடவையும் (2009) கைப்பற்றி உள்ளார்.

    13 ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 2-வது முறையாக வெல்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடாலின் சாதனையை தடுத்து 2-வது கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் மெட்வதேவ் உள்ளார்.

    அவர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சிடம் தோற்று இருந்தார். அதுமாதிரியான நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மெட்வதேவ் கவனமுடன் விளையாடுவார்.

    இன்று நடைபெறும் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்தி ரேலியா)- டேனிலி கோலின்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    ஆஸ்லே பார்டி 3-வது பட்டத்துக்காகவும், கோலின்ஸ் முதல் கிராண்ட்சிலாம் பட்டத்துக்காகவும் காத்திருக்கின்றனர்.
    Next Story
    ×