search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஜோகோவிச்
    X
    ஜோகோவிச்

    ஆஸி. ஓபனில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார் ஜோகோவிச்- நாடு கடத்துவதை உறுதி செய்தது கோர்ட்

    ஆஸ்திரேலிய குடியுரிமை மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்தார்.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை தொடங்க உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என்று புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், நடப்பு சாம்பியனான, நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (வயது 34), தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    எனினும், இந்த போட்டியில் பங்கேற்க போட்டி அமைப்பு குழுவின் மருத்துவ கமிட்டியிடம் மருத்துவ விதிவிலக்கு பெற்று கடந்த 5-ந் தேதி மெல்போர்ன் சென்றார். ஆனால் அவர் எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தபட்டதுடன், அவரது விசாவும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அவர் மெல்போர்னில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மெல்போர்னில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ஜோகோவிச் தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார். 

    ஜோகோவிச்

    ஜோகோவிச்சின் விசா ரத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கோர்ட்டு அவரை தடுப்பு காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கடந்த 10-ந் தேதி தீர்ப்பளித்தது. இதனை அடுத்து அவர் ஆஸ்திரேலிய ஓபனுக்கு தயாராக பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால், ஆஸ்திரேலிய குடியேற்ற மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை நேற்று முன்தினம் மீண்டும் ரத்து செய்தார். இதனால் அவர் மறுபடியும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் நாடு கடத்தப்படும் நிலை ஏற்பட்டது. 

    நாடு கடத்தும் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜோகோவிச், பெடரல் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். பெடரல் கோர்ட் தலைமை நீதிபதி ஜேம்ஸ் ஆல்சோப் மற்றும் இரண்டு நீதிபதிகள் இந்த வழக்கை இன்று விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர். 

    பின்னர் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, ஜோகோவிச்சின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்து அவரை நாடு கடத்துவது தொடர்பாக  குடியேற்ற மந்திரி எடுத்த முடிவையும் நீதிபதிகள் உறுதி செய்தனர். இதனால் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்று, சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் வாய்ப்பை ஜோகோவிச் இழந்துள்ளார்.

    Next Story
    ×