என் மலர்
விளையாட்டு

ஜோகோவிச்
தடுப்பூசி போடுவதில் இருந்து விலக்கு... ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடுகிறார் ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபனுக்கான பயிற்சி போட்டியில் இருந்து ஜோகோவிச் விலகியதால் அவர் போட்டியில் பங்கேற்பாரா? என்பது மர்மமாகவே இருந்தது.
மெல்போர்ன்:
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கும், போட்டியை காண வரும் ரசிகர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து வீரர்-வீராங்கனைகளும் தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.
ஆனால், நம்பர்-1 வீரரும், 9 முறை ஆஸ்திரேலிய ஓபனை வென்றவருமான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தினாரா? இல்லையா? என்பதை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தார். இதனால் அவர் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இருந்து ஜோகோவிச்சுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்தாமல் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட அனுமதி கிடைத்திருப்பதாக ஜோகோவிச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி உள்ளார்.
ஜோகோவிச் இதற்கு முன்பு சிட்னியில் நடந்த ஏடிபி கோப்பை தொடருக்கான செர்பிய அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் ஆஸ்திரேலிய ஓபனுக்கான பயிற்சி போட்டியில் இருந்து விலகினார். எனவே, அவர் போட்டியில் பங்கேற்பாரா? என்பது மர்மமாகவே இருந்தது. தற்போது அவர் தடுப்பூசியில் இருந்து விலக்கு பெற்ற தகவலை வெளியிட்டதன் மூலம் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ரோஜர் பெடரர், ரபேல் நடால், ஜோகோவிச் ஆகியோர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சமநிலையில் உள்ளனர். ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் வெற்றி பெற்று, 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்துடன் சாதனையை முறியடிக்க தீவிர முயற்சி செய்வார்.
Next Story






