search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதிர்
    X
    சுதிர்

    இந்தியா, பாகிஸ்தான் அணிகளை உற்சாகப்படுத்த துபாய் சென்றுள்ள பரம ரசிகர்கள்

    இந்திய அணியின் தீவிர ரசிகர் சுதிர், பாகிஸ்தான் ரசிகர் முகமது பஷிர் ஆகியோர் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக துபாய் சென்றுள்ளனர்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டு ரசிக்க அனுமதி ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி உலகளவில் முழு வீச்சில் நடைபெற்று வருவதால், தற்போது ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்திய அணி எந்த இடத்தில் விளையாடினாலும், தீவிர ரசிகரான சுதிர் அங்கு சென்று இந்திய வீரர்களை உற்சாகப்படுத்துவார். உடல் முழுவதும் இந்திய மூவர்ணக்கொடி கலரை பூசிக்கொண்டு கையில் தேசியக்கொடியை ஏந்தி, சங்கு ஊதி உற்சாகப்படுத்துவார். இவருடைய உற்சாகப்படுத்துதல் இந்திய வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும்.

    தற்போது அவர் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டியை காண துபாய் சென்றுள்ளார். 

    பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாட இருப்பது குறித்து சுதிர் கூறுகையில் ‘‘இது மிகவும் உணர்ச்சிவசமான, அதிகமான அழுத்தம் கொண்ட போட்டி. தற்போது வரைக்கும் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியது கிடையாது. 2007-ல் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றதுபோல், மீண்டும் வெற்றிபெறும் என நம்புகிறேன். இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த முழு உறுதியுடன் வந்துள்ளேன்’’ என்றார்.

    முகமது பஷிர்

    சுதிர் போன்று பாகிஸ்தான் அணியை உற்சாகப்படுத்தி வருபவர் முகமது பஷிர். இவரும் துபாய் சென்றுள்ளார். இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து முகமது பஷிர் கூறுகையில் ‘‘இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடைபெற இருப்பதால், நான் மிகவும் மகிழ்ச்சியா உணர்கிறேன். என்னுடைய இதயம், பிரார்த்தனை பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். ஆனால், எம்.எஸ். டோனி எனக்கு மிகவும் பிடித்தமானவர். இந்த முறை பாகிஸ்தான் வெற்றிபெறும் என நம்புகிறேன். ஆகவே, பாகிஸ்தான் மக்களும் சந்தோசத்தை கொண்டாட முடியும்’’ என்றார்.
    Next Story
    ×