என் மலர்
செய்திகள்

வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா - ராஜஸ்தானுடன் இன்று மோதல்
துபாய்:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
19-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. அபுதாபியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி பஞ்சாப்பை வீழ்த்தி மீண்டும் முதல் இடத்தை பிடிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணி வெற்றி பெற்றால் டெல்லியுடன் இணைந்து தலா 20 புள்ளிகளை பெறும். ரன்ரேட்டில் டெல்லியை விட நல்ல நிலையில் இருப்பதால் வெற்றி பெற்றாலே முதல் இடத்திற்கு சென்னை முன்னேறிவிடும்.
அதே நேரத்தில் டெல்லி அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் இருக்கிறது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரை நாளை வீழ்த்தினால் 22 புள்ளியுடன் முதல் இடத்தை பிடிக்கும்.
சென்னை அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடர்ந்து 4 ஆட்டங்களில் வென்ற பிறகு 2 தோல்வியை தழுவியது. இதனால் சி.எஸ்.கே. வீரர்கள் கவனமுடன் விளையாட வேண்டும்.
பஞ்சாப் அணியை பொறுத்தவரை பிளே- ஆப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது என்றே சொல்லலாம். சென்னையை வீழ்த்தவேண்டிய நெருக்கடி உள்ளது. வெற்றிபெற்றால் 12 புள்ளியை பெறும்.
அதே நேரத்தில் மற்ற அணிகளின் முடிவை பொறுத்து அதன் நிலை இருக்கிறது. ரன் ரேட்டிலும் அந்த அணி மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.
ஷார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
12 புள்ளியுடன் இருக்கும் கொல்கத்தா அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. மிகப்பெரிய வெற்றியை பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் ராஜஸ்தான் அணி இருக்கிறது. அந்த அணியின் நிலை பஞ்சாப்பை போன்றே உள்ளது.
நாளையுடன் லீக் ஆட்டம் முடிகிறது. நாளைய ஆட்டங்களில் மும்பை- ஐதராபாத், டெல்லி- பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
சென்னை, டெல்லி, பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே- ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. 4-வதாக எந்த அணி தகுதி பெறும் என்று நாளை தெரியும். 4 அணிகள் இதற்கான வாய்ப்பில் இருந்தாலும் கொல்கத்தா, மும்பை இடையேதான் போட்டி நிலவுகிறது.






