search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ருதுராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ்
    X
    ருதுராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ்

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

    தொடக்க ஜோடியான ருதுராஜ், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 44-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. வழக்கும்போல் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் சொதப்ப 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியின் தொடக்க பேட்ஸ்மேன் சாகா 46 பந்தில் 44 ரன்கள் எடுத்தது அதிகபட்ச ஸ்கோராகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ருதுராஜ், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 75 ரன்கள் சேர்த்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது இருந்த நெருக்கடியை குறைத்தது.

    ருதுராஜ் 38 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயீன் அலி 17 பந்தில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரெய்னா 2 ரன்னில் வெளியேற, டு பிளிஸ்சிஸ் 36 பந்தில் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார். டு பிளிஸ்சிஸ் ஆட்டமிழக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 15.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது.

    5-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் எம்.எஸ். டோனி ஜோடி சேர்ந்தார். அப்போது சென்னை அணிக்கு 25 பந்தில் 27 ரன்கள் தேவைப்பட்டது.

    கடைசி 3 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரின் 4-வது பந்தில் டோனி கொடுத்த கடினமான கேட்சை ஜேசன் ராய் பிடிக்க தவறினார். இதனால் டோனி 2 ரன்னில் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பினார். அடுத்த பந்தை அம்பதி ராயுடு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது.

    மொயீன் அலி விக்கெட்டை வீழ்த்திய ரஷித்கான்

    19-வது ஓவரை புவி வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார் அம்பதி ராயுடு. 4-வது பந்தை பவுண்டரிக்கு விராட்டினார் டோனி.  கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது.

    கடைசி ஓவரை சித்தார்த் கவுல் வீசினார்.  4-வது பந்தை டோனி சிக்சருக்கு தூக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    Next Story
    ×