என் மலர்
செய்திகள்

மொயீன் அலி
முதல் இன்னிங்சில் 290 ரன்கள் குவித்தது இங்கிலாந்து- இந்தியாவை விட 99 ரன்கள் முன்னிலை
சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தபோதும், மறுமுனையில் பொறுமையுடன் ஆடிய ஒல்லி போப் 81 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தார்.
லண்டன்:
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 57 ரன்கள் எடுத்தார். கேப்டன் விராட் கோலி 50 ரன் எடுத்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. மலான் 26 ரன்களுடனும், ஓவர்டன் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று 2ம் நாள் ஆட்டத்தின்போது ஓவர்டன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். டேவிட் மலான் 31 ரன்கள் மட்டுமே சேர்த்தார். நிதானமாக ஆடிய பேர்ஸ்டோ 37 ரன்களும், மொயீன் அலி 35 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். ஒருபுறம் சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தபோதும், மறுமுனையில் பொறுமையுடன் ஆடிய ஒல்லி போப் 81 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய கிறிஸ் வோக்ஸ் அரை சதம் அடித்தார். ஆனால் அந்த ஓவரின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி 290 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்சில் இந்தியாவைவிட 99 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து இந்தியா 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.
Next Story






