என் மலர்
செய்திகள்

ஜேம்ஸ் ஆண்டர்சன்
லார்ட்ஸ் மைதானத்தில் இது என்னுடைய கடைசி போட்டி கிடையாது: ஜேம்ஸ் ஆண்டர்சன்
லார்ட்ஸ் மைதானம் தனக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும் என இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது.
நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பாக பந்து வீச இந்தியா 364 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 88 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா 7 விக்கெட்டுக்களை இழந்தது. ஆண்டர்சன் 62 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். இதன்மூலம் 31-வது முறையாக ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் ஏழு முறை ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
39 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டியில் இருந்து எப்போது விடைபெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தற்போதைக்கு ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என ஆண்டர்சன் தெரிவித்து வருகிறார்.
லார்ட்ஸ் அவரது சொந்த மைதானமாகும். இங்கு விளையாடும்போதெல்லாம் ஆண்டர்சனுக்கு இது கடைசி போட்டியாக இருக்கும். ஆகவே, சிறப்பாக பந்து வீச வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், லண்டன் லார்ட்ஸில் இது கடைசி அல்ல என ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போதைக்கு ஓய்வு இல்லை என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘லண்டன் லார்ட்ஸ் என்றால் எனக்கு சற்று கூடுதல் சிறப்பு. எனக்கு கூடுதலாக சிறப்பான பந்து வீச்சை கொண்டுவரும். கடந்த சில போட்டிகளுக்காக நான் இங்கே வரும்போது, எனக்கு கடைசி போட்டியாக இருக்கலாம். இதனால் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என நீங்கள் நினைக்கலாம். ஆகவே, இந்த சிறந்த பந்து வீச்சை நீங்கள் விரும்புவீர்கள்.

லண்டன் லார்ட்ஸ் மைதானம் நான் அறிமுகமான இடம். நான் முதன்முறையாக ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய இடம். தற்போது 7 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பது நம்பமுடியாதது. இதை எப்படி செய்தேன் என்பது எனக்கே தெரியவிலலை. இந்த போட்டி என்னுடைய கடைசியானது கிடையாது. லார்ட்ஸ் மைதான கவுரவ பலகையில் எனது பெயர் எழுதப்படுவது இது கடைசியாக இருக்காது என்று நம்புகிறேன்’’ என்றார்.
Next Story






