என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீரஜ் சோப்ரா
    X
    நீரஜ் சோப்ரா

    பண மழையில் நீரஜ் சோப்ரா - பைஜூஸ் நிறுவனம் ரூ.2 கோடி அறிவிப்பு

    டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுக்கு நாள்தோறும் பாராட்டுகளும், பரிசுகளும் குவிகின்றன.

    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கங்களை பெற்று 48-வது இடத்தை பிடித்தது.

    வேறு எந்த ஒலிம்பிக்கிலும் இல்லாத வகையில் இந்த ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை பெற்று சாதனை படைத்து உள்ளது. இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் வென்றதே சிறந்த நிலையாக இருந்தது.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். ஈட்டி எறியும் வீரரான அவர் 86.65 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார்.

    121 ஆண்டு கால இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று பெருமையை அவர் பெற்றார்.

    தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுக்கு நாள்தோறும் பாராட்டுகளும், பரிசுகளும் குவிகின்றன.

    அவரது சொந்த மாநிலமான அரியானா அரசு ரூ.6 கோடி பரிசுத்தொகையை அறிவித்தது. பஞ்சாப் அரசு ரூ.2 கோடியும், மணிப்பூர் அரசு ரூ.1 கோடியும் அறிவித்தன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.1 கோடியும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.1 கோடியும், எலன் குழுமம் ரூ.25 லட்சமும் நீரஜ் சோப்ராவுக்கு பரிசாக வழங்குவதாக தெரிவித்தன.

    மகேந்திரா குழுமம் சொகுசு காரை பரிசாக வழங்குவதாக அறிவித்தது. இன்டிகோ நிறுவனம் நீரஜ் சோப்ராவுக்கு ஓராண்டுக்கான இலவச பயணத்தை அறிவித்தது.

    இந்தநிலையில் பைஜூஸ் நிறுவனம் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இதற்கிடையே நாடுதிரும்பும் நீரஜ் சோப்ராவுக்கு மிகவும் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க இந்திய ஒலிம்பிக் சங்கமும், இந்திய தடளக சம்மேளனமும் முடிவு செய்து உள்ளது.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பைஜூஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

    பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, மல்யுத்த வீரர் ரவிகுமார் தகியா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, குத்துசண்டை வீராங்கனை லவ்லினா, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கமும் பெற்று இருந்தனர்.

    இதற்கிடையே 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணிக்கு ரூ.1¼ கோடி பரிசுத்தொகை வழங்குவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    இதேபோல வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.50 லட்சமும், வெண்கலப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்குவதாக தெரிவித்துள்ளது. கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையை அறிவித்து இருந்தது.

    Next Story
    ×