search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரேசில் அணியின் நட்சத்திரம் நெய்மார் கோல் அடித்த மகிழ்ச்சியை சக வீரர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    X
    பிரேசில் அணியின் நட்சத்திரம் நெய்மார் கோல் அடித்த மகிழ்ச்சியை சக வீரர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

    கோபா அமெரிக்கா கால்பந்து - தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி அபார வெற்றி

    வெனிசுலா அணியில் 8 வீரர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை களம் இறக்க போட்டி அமைப்பு குழு அனுமதி அளித்து இருந்தது.
    பிரேசில்லா:

    தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. அங்குள்ள 4 நகரங்களில் ரசிகர்கள் அனுமதியின்றி போட்டி நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

    பிரேசில்லாவில் நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரேசில் அணி, வெனிசுலாவை (பி பிரிவு) சந்தித்தது. வெனிசுலா அணியில் 8 வீரர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை களம் இறக்க போட்டி அமைப்பு குழு அனுமதி அளித்து இருந்தது. இதன்படி அந்த அணி அதிக மாற்று வீரர்களுடன் ஆடியது.

    பிரேசில் அணி


    வலுவான பிரேசில் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் அசத்தலான ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் வெனிசுலா அணி திணறியது. ஒருதலைபட்சமாக அமைந்த இந்த ஆட்டத்தில் 23-வது நிமிடத்தில் பிரேசில் அணி முதல் கோல் அடித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் கார்னர் வாய்ப்பில் கோலை நோக்கி அடித்த பந்தை சக வீரர் மார்குயினோஸ் லாவகமாக செயல்பட்டு கோலாக மாற்றினார்.

    64-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி நெய்மார் கோல் அடித்தார். அவர் அடித்த 67-வது சர்வதேச கோல் இதுவாகும். பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களில் நெய்மார் 2-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஜாம்பவான் பீலே 77 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். 89-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் மாற்று ஆட்டக்காரர் கேப்ரியல் பார்போசா கோல் போட்டார். நெய்மார் கோலை நோக்கி அடித்த பந்தை கேப்ரியல் பார்போசா நெஞ்சால் முட்டி கோல் வலைக்குள் திருப்பினார்.

    முடிவில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

    இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தியது. 42-வது நிமிடத்தில் பிரிகிக் வாய்ப்பில் கொலம்பியா வீரர் எட்வின் கார்டோனா வெற்றிக்கான கோலை அடித்தார். இந்த போட்டி தொடரில் ஈகுவடாருக்கு எதிராக கொலம்பியா அணி தொடர்ச்சியாக பெற்ற 8-வது வெற்றி இதுவாகும்.
    Next Story
    ×