search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி
    X
    இந்திய அணி

    இங்கிலாந்து தொடருக்கான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷபாலி வர்மாவுக்கு இடம்

    இங்கிலாந்து தொடருக்கான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியில் முதல்முறையாக ஷபாலி வர்மா சேர்க்கப்பட்டு உள்ளார்.
    புதுடெல்லி:

    இங்கிலாந்து தொடருக்கான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியில் முதல்முறையாக ஷபாலி வர்மா சேர்க்கப்பட்டு உள்ளார்.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் ஜூன் 16-ந் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டி முறையே ஜூன் 27-ந் தேதி, ஜூன் 30-ந் தேதி, ஜூலை 3-ந் தேதிகளிலும், 20 ஓவர் போட்டி முறையே ஜூலை 9, 11, 15 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.

    இந்திராணி ராய், ஷபாலி வர்மா


    இங்கிலாந்து தொடருக்கான இந்திய பெண்கள் அணியை நீது டேவிட் தலைமையிலான தேர்வு குழுவினர் தேர்வு செய்து அறிவித்துள்ளனர். 20 ஓவர் போட்டி அணியின் அதிரடி தொடக்க வீராங்கனையான 17 வயது ஷபாலி வர்மா முதல்முறையாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷிகா பாண்டே, இடக்கை சுழற்பந்து வீச்சு வீராங்கனை எக்தா பிஷ்த், விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா ஆகியோர் மூன்று வடிவிலான அணியிலும் இடம் பிடித்துள்ளனர்.

    ஜார்கண்டை சேர்ந்த விக்கெட் கீப்பர் இந்திராணி ராய் அறிமுக வீராங்கனையாக இடம் பெற்றுள்ளார். முதுகுவலி பிரச்சினையில் இருந்து மீண்டுள்ள ஸ்னே ராணா 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். கொரோனா தொற்றுக்குள்ளான இடக்கை சுழற்பந்து வீச்சு வீராங்கனை ராஜேஸ்வரி கெய்க்வாட், பாதிப்பில் இருந்து மீண்ட போதிலும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

    இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்கான இந்திய பெண்கள் அணி வருமாறு:-

    டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி: மிதாலி ராஜ் (கேப்டன்), ஸ்மிர்தி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் (துணை கேப்டன்), பூனம் ரவுத், பிரியா பூனியா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ஸ்னே ராணா, தானியா பாட்டியா, இந்திராணி ராய், ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூஜா வஸ்ட்ராகர், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், எக்தா பிஷ்த், ராதா யாதவ்.

    20 ஓவர் அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிர்தி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ரிச்சா கோஷ், ஹர்லீன் டியோல், ஸ்னே ராணா, தானியா பாட்டியா, இந்திராணி ராய், ஷிகா பாண்டே, பூஜா வஸ்ட்ராகர், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், எக்தா பிஷ்த், ராதா யாதவ், சிம்ரன் பகதூர்.
    Next Story
    ×