search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    நடுவரின் முடிவுக்கு ரோகித்சர்மா ஆட்சேபம் - அபராதம் விதிக்க வாய்ப்பு

    பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா நடுவரின் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்து அவரை வார்த்தைகளால் வசைபாடினார்.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் 2-வது வெற்றியை பெற்றது.

    சென்னையில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணிக்கு 132 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 52 பந்தில் 63 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் 27 பந்தில் 33 ரன்னும் (3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். முகமது ‌ஷமி, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டும், தீபக் ஹூடா, அர்ஷ்த்தீப்சிங் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கேப்டன் லோகேஷ் ராகுல் 52 பந்தில் 60 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்), கிறிஸ்கெய்ல் 35 பந்தில் 43 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), எடுத்தனர்.

    இந்த போட்டியில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா நடுவரின் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்து அவரை வார்த்தைகளால் வசைபாடினார்.

    பஞ்சாப் வீரர் ஹென்ரிக்ஸ் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் 5-வது பந்தில் ரோகித் சர்மாவுக்கு நடுவர் சம்சுதீன் அவுட் கொடுத்தார். பந்து தொடையில் பட்டு சென்றதை கேட்ச் பிடித்ததாக அவுட் கொடுக்கப்பட்டதால் ரோகித் சர்மா நடுவர் மீது கடும் அதிருப்தி அடைந்தார்.

    நடுவரை வார்த்தைகளால் வசை பாடியவாரே அவர் டி.ஆர்.எஸ். முடிவுக்கு சென்றார். இதில் ரோகித் சர்மா அவுட் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அவர் தொடர்ந்து களத்தில் நின்று சிறப்பாக விளையாடி 63 ரன்களை எடுத்தார்.

    ரோகித் சர்மா களத்தில் நடந்துகொண்ட விதம் ஐ.பி.எல். நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.

    ரோகித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மெதுவான பந்துவீச்சுக்காக அவருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.

    மும்பை அணி 2-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, நாங்கள் போதுமான அளவுக்கு ரன்களை குவிக்கவில்லை.

    கடந்த சில ஆட்டங்களில் எங்களது பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. 150 முதல் 170 ரன்கள் வரை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய தவறி விட்டோம் என்றார்.

    பஞ்சாப் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். இந்த வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் ராகுல் கூறும்போது, ‘வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றியை பெற்றுள்ளோம். இனி வரும் ஆட்டங்களிலும் தொடர்ந்து சிறப்பாக ஆட போராடுவோம்‘ என்றார்.

    பஞ்சாப் அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவை 26-ந் தேதி எதிர்கொள்கிறது. மும்பை 29-ந் தேதி ராஜஸ்தானுடன் மோதுகிறது.

    Next Story
    ×