search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரை சதமடித்த கேஎல் ராகுல்
    X
    அரை சதமடித்த கேஎல் ராகுல்

    ராகுல், கெயில் பொறுப்பான ஆட்டம் - மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி

    கே எல் ராகுல் அரை சதமடிக்க, கெயில் ஒத்துழைக்க பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.
    சென்னை:

    ஐபிஎல் தொடரின் 17-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, டி காக் ஆகியோர் களம் இறங்கினர்.

    டி காக் 3 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
     
    3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    மறுமுனையில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, 52 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களே எடுத்தது. பொல்லார்டு 12 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பஞ்சாப் அணியில் முகமது ஷமி, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்கள் கே எல் ராகுலும், மயங்க் அகர்வாலும் நிதானமாக ஆடினர். அகர்வால் 25 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய கிறிஸ் கெயில் ராகுலுடன் சேர்ந்து அதிரடியாக ஆடினார். ராகுல் அரை சதமடித்து அசத்தினார்.

    கடைசி கட்டத்தில் கிறிஸ் கெயில் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். ராகுல் 60 ரன்னுடனும், கெயில் 43 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இறுதியில், பஞ்சாப் அணி 17.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணியின் இரண்டாவது வெற்றி ஆகும்.
    Next Story
    ×