என் மலர்
செய்திகள்

டி நடராஜன்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு பேரிடி: டி நடராஜன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல் எனத் தகவல்
யார்க்கர் பந்து வீச்சில் வல்லவரான டி நடராஜன், காயம் காரணமாக இத்தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் டி நடராஜன். கடந்த சீசனில் ஏராளமான யார்க்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று தொடர்களிலும் அறிமுகம் ஆனார்.
2021 சீசனில் புவியுடன் டி நடராஜன் சேர்ந்து பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தில் களம் இறங்கினார். கொல்கத்தாவிற்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடினார். நடராஜன் 37 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
அதன்பின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. மூன்று போட்டிகளிலும் டி நடராஜன் இடம் பெறவில்லை. அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் விளையாடவில்லை என அணி நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில் கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியா தொடர் முடிந்த பின்னர், பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இரண்டு மாதம் செலவழித்தார். அவரது காயம் குறித்து என்சிஏ பிசியோ கண்காணித்து பிசிசிஐ-யிடம் ஆலோசித்ததாகவும், அதன்பின், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் கலந்தாலோசித்து அவரை மேலும் விளையாட வைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘‘நாங்கள் முழுமையான அறிக்கை பெறவில்லை. ஆனால், அவரது கால் மூட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் காயத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சைக்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்வார்’’ என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்து வந்துள்ளது.
சிறந்தத டெத் ஓவர் பந்து வீச்சாளரான டி நடராஜன் தொடரில் இருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பேரிடியாக அமைந்துள்ளது.
Next Story






