search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஐ.பி.எல். ஒளிபரப்பு மூலம் ரூ.3,800 கோடி வருமானம் - 10 வினாடிக்கு விளம்பர கட்டணம் ரூ.14 லட்சம்

    ஐபிஎல் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2018-ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுக்கு ஒளிபரப்பு செய்ய ரூ.16,347.5 கோடிக்கு கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

    மும்பை:

    உலகில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் அதிகளவில் வருமானம் கொட்டுவது ஐ.பி.எல். போட்டியில்தான். இதில் விளம்பரம் மற்றும் ஒளிபரப்பு மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கோடிக்கணக்கில் வருவாயை ஈட்டுகின்றன.

    கொரோனா பரவல் இருந்த போதிலும் இந்த போட்டியை கடந்த ஆண்டு கிரிக்கெட் வாரியம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் நடத்தி முடித்தது.

    இந்த போட்டி ரத்து செய்யப்பட்டால் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். இதனால்தான் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. தற்போது 14-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமையை பெற்றுள்ளது. 2018-ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுக்கு ஒளிபரப்பு செய்ய ரூ.16,347.5 கோடிக்கு கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்புவதன் மூலம் ரூ.3,600 கோடி முதல் ரூ.3,800 கோடி வரை வருவாய் கிடைக்கிறது.

    அந்த நிறுவனம் 10 வினாடிக்கு விளம்பர கட்டணமாக ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை பெறுகிறது. இது கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியை விட 14 முதல் 15 சதவீதம் அதிகமாகும்.

    ஆண்டுக்கு ஆண்டு ஐ.பி.எல். போட்டியை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்து உள்ளது.இதனால் விளம்பர கட்டணமும் உயர்த்தப்பட்டு வருகிறது.

    ஐ.பி.எல். போட்டியில் மொத்தம் 60 ஆட்டங்கள் நடக்கிறது. இந்த போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விளம்பரங்கள் வழியாக கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கின்றன.

    Next Story
    ×