search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நரேந்திர மோடி ஸ்டேடியம்
    X
    நரேந்திர மோடி ஸ்டேடியம்

    உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் - அமித் ஷா

    ஆமதாபாத்தில் உள்ள மோட்டேராவில் சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படுவதாக உள்துறை மந்திரி அமித் ஷா அறிவித்தார்.
    குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மோட்டேராவில் சர்தார் பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. சபர்மதி நதியின் கரையில் அமைந்துள்ள இந்த மைதானத்தை உலகின் மிகப்பெரிய மைதானமாக மாற்றுவதற்கு 2015-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு அதை இடித்து புதுப்பிக்கப்பட்டது. மறுசீரமைப்பு பணிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. 63 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.800 கோடி செலவில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்க்கலாம். இதன் மூலம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் என்ற சிறப்பை பெற்றிருக்கிறது. எவ்வளவு மழை பெய்தாலும் மழை நின்றதும் அரைமணி நேரத்திற்குள் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் வடிகால் வசதி, ராட்சத கோபுர விளக்குகளுக்கு பதிலாக மைதானத்தின் மேற்கூரையில் கீழே நிழல் விழாத வகையில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. பல்புகள், உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் வீரர்களுக்கு உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய 4 உடைமாற்றும் ஓய்வறை என்று கவர்ந்திழுக்கும் வசதி வாய்ப்புகளை கொண்டுள்ளது.

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா


    இந்த மைதானத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழா நேற்று பிற்பகல் நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மைதானத்தை முறைப்படி திறந்து வைத்தார். விழாவில் மத்திய மந்திரிகள் அமித் ஷா, கிரண் ரிஜிஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்த் பேசுகையில் ‘இந்த பிரமாண்டமான ஸ்டேடியம் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்த போது அவரது எண்ணத்தில் உருவானதாகும். அந்தசமயம் அவர் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

    கிரிக்கெட்டின் மையமாக இந்தியா விளங்குகிறது. எனவே உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் நம்மிடம் இருப்பது பொருத்தமானது. இது இந்தியாவுக்கு புதிய அடையாளத்தை கொடுக்கும்’ என்றார்.

    உள்துறை மந்திரி அமித் ஷா கூறுகையில், ‘இந்த மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படுகிறது. இது அவரது கனவு திட்டம்’ என்றார்.

    அதைத் தொடர்ந்து இ்ந்தியா-இங்கிலாந்து இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 100-வது டெஸ்டில் பங்கேற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய மந்திரி அமித் ஷா ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினர்.
    Next Story
    ×