search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் டிராவிட்
    X
    ராகுல் டிராவிட்

    ஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட்டை சேர்க்கலாம் - ராகுல் டிராவிட் ஆதரவு

    ஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை சேர்க்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனருமான ராகுல் டிராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தப்போட்டியில் கிரிக்கெட்டையும் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இது தொடர்பாக ஒலிம்பிக் குழு அமைப்பினருடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி இருந்தது.

    ஐ.சி.சி. கடந்த 2018-ம் ஆண்டு நடத்திய சர்வேயில் 87 சதவீத ரசிகர்கள் ஒலிம்பிக்கில் 20 ஓவர் போட்டியை சேர்க்க ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் ஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை சேர்க்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனருமான ராகுல் டிராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    கிரிக்கெட் பல்வேறு நாடுகளில் விளையாடப்பட்டு வருகிறது. கிரிக்கெட்டில் 20 ஓவர் போட்டி சிறந்ததாகும். 75-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த போட்டியில் ஆடுகின்றன. இதனால் 20 ஓவர் போட்டியை ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்கலாம்.

    ஐ.பி.எல். போட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எனவே ஒலிம்பிக்கில் 20 ஓவர் அறிமுகம் செய்யப்பட்டால் மிகவும் பிரபலம் அடையும். கிரிக்கெட்டுக்கு இது நல்லது.

    மைதான வசதிகள் சரியாக அமைந்து விட்டால் வெற்றிகரமாகிவிடும். இதனால் ஏதாவது ஒரு வகையில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற வேண்டும். இதற்கு சிறிது காலம் தேவைப்படலாம். ஆனால் இடம்பெறாமல் இருக்க கூடாது.

    இவ்வாறு ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

    47 வயதான அவர் தெண்டுல்கருக்கு அடுத்தபடியாக டெஸ்டில் அதிக ரன் அடித்த இந்திய வீரர் ஆவார். டிராவிட் 168 டெஸ்டில் விளையாடி 13,288 ரன் எடுத்துள்ளார்.

    ஒலிம்பிக் போட்டிக்கு அணியை அனுப்பும் ஆர்வம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) இல்லை.

    2010 மற்றும் 2014 ஆண்டுகளில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட்டில் ஆட இந்திய அணியை பி.சி.சி.ஐ. அனுப்பவில்லை. ஐ.சி.சி.யில் உள்ள உறுப்பினர்களில் பணக்கார மற்றும் வலிமையான அமைப்பு பி.சி.சி.ஐ. என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×