என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை - கொல்கத்தா
    X
    சென்னை - கொல்கத்தா

    3-வது வெற்றி யாருக்கு? சிஎஸ்கே - கொல்கத்தா நாளை பலப்பரீட்சை

    அபு தாபியில் 3-வது வெற்றிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    ஐபிஎல் போட்டியில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் 23 முறை மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 14 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 முறையில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது.


    கொல்கத்தாவிற்கு எதிராக சென்னை அதிகபட்சமாக 205 ரன்கள் அடித்துள்ளது. சென்னைக்கு எதிராக கொல்கத்தா 202 ரன்கள் அடித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஐந்து போட்களில் சென்னையே வெற்றி வாகை சூடியுள்ளது. சேஸிங்கிலும் சென்னை கையே ஓங்கியுள்ளன. சென்னை 9 முறையும், கொல்கத்தா 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

    போட்டி அபு தாபியில் நடக்கிறது. முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து இங்குதான் சென்னை அணி வெற்றி பெற்றது. இதுவரை அபு தாபியில் ஆறு போட்டிகள் நடைபெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இரண்டு முறை 190 ரன்கள் அடித்துள்ளது. அதன்பின் சென்னை சேஸிங் செய்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஆகவே அபு தாபி பிட்ச் சற்று டிரிக்கியான இருக்கலாம். 170 ரன்களுக்கு மேல் அடித்தால் சேஸிங் சற்று கடினமானதாக இருக்கலாம்.

    முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றி பார்ப்போம்.

    சென்னை அணி ஹாட்ரிக் தோல்விக்குப்பின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து வெற்றி பெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 179 ரன்னை சென்னை சேஸிங் செய்யுமா? என்ற சந்தேகம் எழ, சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரி பிரகாசமாக ஜொலிப்பது போன்று வாட்சன் ஜொலித்தார்.

    53 பந்தில் 11 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 83 ரன்கள் விளாசி சூப்பர் ஃபார்முக்கு வந்ததுடன் டு பிளிஸ்சிஸ் உடன் இணைந்து விக்கெட் இழக்காமல் 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தார். பந்தை மிட்-ஆன் மிட்ஆஃப் திசைக்குள்ளேயே ஸ்டிரைட் பேட் ஷாட்டுகளை தேர்வு செய்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    சென்னை அணியின் பேட்டிங்கிற்கு வாட்சன் ஃபார்முக்கு திரும்பியுள்ளது மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. வாட்சன் பொதுவாக சிங்கிள், டபுள்ஸ் ரன்களை விரும்புவதில்லை. பஞ்சாப் அணிக்கெதிராக 19 டாட் பால்ஸ். 21 சிங்கிள் அடித்துள்ளார். களத்தில் நீண்ட நேரம் நின்று விட்டால் பவுண்டரிகள், சிக்சர்கள் தானாகவே வரும். இதனால் வாட்சன் களத்தில் எவ்வளவு நேரம் நிற்கிறாரோ? அவ்வளவு சென்னை அணிக்கு சாதகம்.

    டு பிளிஸ்சில் எங்களுக்கு நங்கூரம் போன்றவர். ஆட்டத்தின் நடுப்பகுதியில் நல்ல ஷாட்களை அடித்து ஆடக்கூடியவர். வித்தியாசமான ஷாட்களால் எதிரணி பவுலர்களை குழப்பி விடுவார் என்று கேப்டன் டோனியோ சர்ட்டிபிகேட் கொடுத்து விட்டார். ஐந்து போட்டிகளில் நான்கு அரைசதங்களுடன் நேஷனல் ஹைவேயில் சென்று கொண்டிருக்கிறார். ஷாட்கள் அடிப்பதுடன் சிங்கிள், டபுள்ஸ் அடிப்பதிலும் வல்லவர். இவர் ஸ்டிரைக்கில் பெரும்பாலும் டாட் பால் இருக்காது.

    காயத்திற்குப்பின் அம்பதி ராயுடு ஒரு போட்டியில் விளையாடியுள்ளார். அதில் பிரகாசிக்கவில்லை. மிடில் ஆர்டர் இன்னும் சரியான வகையில் பரிசோதிக்கப்படவில்லை. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக அம்பதி ராயுடு, கேதர் ஜாதவின் மோசமான ஆட்டத்தால் போட்டியை தோற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த போட்டியில் ஜடேஜா அரைசதம் அடித்தது சற்று ஆறுதல்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டோனியால் அதிக ஓவர்கள் நின்று விளையாட முடியவில்லை. சோர்ந்து விட்டார். அதை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி திட்டமிடுவார். இந்த சீசனில் இன்னும் பினஷர் வேலையை தொடங்கவில்லை.

    2-வது பேட்டிங் எடுத்தால் வாட்சன் ஃபார்மால் 190 ரன்கள் வரை சேஸிங் செய்யும் நம்பிக்கையில் சென்னை அணி களம் இறங்கும். ஒருவேளை முதலில் பேட்டிங் செய்தால் 200 ரன்கள் அடிக்க வேண்டும். இது ஒன்றுதான் பேட்டிங்கில் சென்னைக்கு கேள்விக்குறியாக உள்ளது.

    பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் தீபக் சாஹர் தனது பணியை செம்மையாக செய்து வருகிறார். ஐந்து போட்டிகளில் ஐந்து விக்கெட் மட்டுமே வீழ்த்தினாலும், பவர் பிளேயில் நேர்த்தியாக பந்து வீசுகிறார். பஞ்சாப் அணிக்கெதிராக 3 ஓவரில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இவருக்கு துணையாக சாம் கர்ரனும் ஈடுகொடுத்து பந்து வீசுகிறார்.

    இதனால் பவர் பிளேயில் சென்னை அணிக்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட வாய்ப்பில்லை. மிடில் ஓவர்களில் சாவ்லா, ஜடேஜா சிறப்பாக பந்து வீசினால் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். அந்த்ரே ரஸல், மோர்கனுக்கு இவர்கள் எப்படி பந்து வீசுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

    வெயின் பிராவோ அணிக்கு திரும்பியுள்ளது டெத் ஓவர்களில் சற்று வலுசேர்த்துள்ளார். ஷர்துல் தாகூர் ஸ்லோவர் ஒன், நக்குல் பால் சிறப்பான வகையில் வீசுவார். தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பிராவோ டெத் ஓவரில் சென்னைக்கு மிகப்பெரிய பலம். சாம் கர்ரன் கடைசி நேரத்தில் ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுக்கிறார். இதில் சற்று கவனம் செலுத்துவது அவசியம். தற்போது ஆறு பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவது சென்னை அணிக்கு தெம்பை கொடுத்துள்ளது என்று சொல்லலாம்.

    கொல்கத்தா இதுவரை நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டில் தோல்வியடைந்துள்ளது. மும்பைக்கு எதிராக அபுதாபியில் 196 சேஸிங்கை எதிர்கொண்டபோது 146 ரன்களே எடுத்தது. அடுத்த போட்டியில் ஐதராபத்தை 142 ரன்னில் கட்டுப்படுத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கொல்கத்தா அணியை பொறுத்த வரைக்கும் ஷுப்மான் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், அந்த்ரே ரஸல், மோர்கன், ராகுல் திரிபாதி என ஆறு பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதில் ஷுப்மான கில் அணியை நிதானமாக எடுத்துச் செல்லக் கூடியவர். மற்ற அனைவரும் மிகப்பெரிய ஹிட்டர்கள்.

    ஷுப்மான் கில்லுடன் சுனில் நரைனை அந்த அணி தொடக்க வீரராக களம் இறக்கி விடுகிறது. 10 பந்துகளை சந்தித்து 25 ரன்கள் எடுத்தாலே அணிக்கு சாதகம் என்ற கோணத்தில் கொல்கத்தா அணி அவரை பயன்படுத்துகிறது.

    ஆனால் நான்கு போட்டிகளில் 9, 0, 15, 3 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இருந்தாலும் கொல்கத்தா அணி அவர்மீது நம்பிக்கை வைத்துள்ளது.

    நிதிஷ் ராணா ஒரு சைலண்ட் கில்லர். முதல் மூன்று போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றாலும், டெல்லிக்கு எதிராக 35 பந்தில் 58 ரன்கள் அடித்தார்.

    அந்த அணியில் இருக்கும் மிகப்பெரிய குழப்பமே தினேஷ் கார்த்திக், அந்த்ரே ரஸல், மோர்கன் ஆகியோரில் யாரை முன்வரிசையில் களம் இறக்குவது என்பதுதன். கடந்த சீசனில் அந்த் ரஸல் சூப்பர் பார்மில் இருந்தார். அவருக்கு போதுமான அளவு பந்துகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது பெரும் விவாதமாக கிளம்பியது.

    இதனால் இந்த சீசனில் முன்னதாக களம் இறக்கப்படுகிறார். என்றாலும் 11, 24, 13 என விரைவில் ஆட்டமிழந்து விடுகிறார். தினேஷ் கார்த்திக் சுத்த ஃ.பார்ம் அவுட்.

    மோர்கன் தலைசிறந்த ஹிட்டர். ஆனால் ரஸல், தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த பின்னர் வந்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் செல்லும் பொறுப்பு இவரது தலையில் விழுகிறது. இவரும் வெற்றி நோக்கி அணியை எடுத்துச் செல்லும்போது, 10 பந்தில் 25 ரன்கள் தேவை என்ற நிலை இருக்கும்போது ஆட்டமிழந்து விட்டால், அந்த ரன்னை அடிக்க பேட்ஸ்மேன்கள் இல்லை.

    அந்த்ரே ரஸல் நல்ல நிலைக்கு திரும்ப வேண்டும். இல்லை எனில் மோர்கன் முன்னதாக களம் இறங்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடைபெற்றால் கொல்கத்தா விஸ்வரூபம் எடுக்கும்.

    பேட் கம்மின்ஸ், நாகர்கோட்டி, ஷிவம் மவி, அந்த்ரே ரஸல், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி என ஆறு பந்து வீச்சாளர்கள் வைத்துள்ளது.

    பந்து வீச்சுக்கு கொஞ்சம் ஒத்துழைக்கும் ஆடுகளத்தில் பேட் கம்மின்ஸ், நாகர்கோட்டி, ஷிவம் மவி, அந்த்ரே ரஸல் அசத்தக் கூடியவர்கள்.

    எப்படியாயினும் முதலில் பேட்டிங் செய்த அணி 170 ரன்களுக்கு மேல் அடித்தால் கடும் சவாலாக இருக்கும்.
    Next Story
    ×