search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபக் சாஹர்
    X
    தீபக் சாஹர்

    கொரோனாவில் இருந்து மீண்ட தீபக் சாஹர், சிஎஸ்கே வீரர்களுடன் பயிற்சியில் பங்கேற்பு

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தீபக் சாஹர் குணமடைந்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.
    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபு தாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது.

    ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்காக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சி.எஸ்.கே. அணியின் வேகப்பந்து வீரர் தீபக் சாஹர், பேட்ஸ்மேன் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகிய 2 வீரர்கள் உள்பட 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி தாமதம் ஆனது. 2 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் கடந்த 4-ந்தேதியில் இருந்து பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தீபக் சாஹர் அதில் இருந்து முற்றிலும் குணமடைந்து உள்ளார். இதனால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு மீண்டும் இணைந்து கொண்டார்.

    கொரோனா பாதிப்புக்கு பிறகு 2 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். 14 நாட்கள் தனிமைக்கு பிறகு தீபக் சாஹகருக்கு 2 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா இல்லை என்பதற்கான நெகடிவ் முடிவு வந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து அவர் சி.எஸ்.கே. அணியோடு மீண்டும் இணைந்து, பயிற்சியில் பங்கேற்றார். பயிற்சிக்கு முன்பு அவருக்கு பல்வேறு உடல் தகுதி சோதனை செய்யப்பட்டது. தொடக்க ஆட்டத்தில் தீபக் சாஹர் இடம்பெறுவாரா? என்பது உறுதியில்லை.

    புதுமுக வீரரான ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு வருகிற 12-ந்தேதிதான் தனிமை முடிகிறது. அதன்பிறகு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும். இதன் முடிவை பொறுத்தே அவர் அணியோடு இணைவது தெரியவரும்.

    தற்போது ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்று சி.எஸ்.கே. அணியின் தலைமை செயல் அதிகாரி கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×