என் மலர்
செய்திகள்

கிறிஸ்டியானோ ரொனால்டோ
ரசிகர்கள் இல்லாத மைதானம் கோமாளி இல்லாத சர்க்கஸ்: ரொனால்டோ சொல்கிறார்
சர்வதேச கால்பந்து போட்டியில் 100 கோல்கள் அடித்து சாதனைப் படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரசிகர்கள் இல்லாதது கோமாளி இல்லாத சர்க்கஸ் போன்றது எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டிகள் ரசிகர்கள் இன்றி வெறிச்சோடிய மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் கம்பீரமாக விளையாடிய வீரர்களுக்கு இது சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முன்னணி வீரர்களுக்கு ரசிகர்களின் ஆரவாரம் கூடுதல் பூஸ்ட் அளிப்பதாக இருக்கும்.
தற்போது நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று போர்ச்சுக்கல் - சுவீடன் அணிகள் மோதின. போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல் அடிக்க போர்ச்சுக்கல் 2-0 என வெற்றி பெற்றது. முதல் கோலை அடிக்கும்போது ரொனால்டோ சர்வதேச அளவில் 100-வது கோலை பதிவு செய்தார்.
ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுவது குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில் ‘‘ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் போட்டி என்பது, கோமாளி இல்லாத சர்க்கஸ், பூக்கள் இல்லாத தோட்டம் போன்றது. வீரர்களாகிய நாங்கள் ரசிகர்கள் இல்லாததை விரும்பவில்லை.
ஆனால் நான் ஏற்கனவே இந்த சூழ்நிலையில் விளையாடியிருக்கிறேன். மைதானம் வெறிச்சோடி இருக்கும் என்பது முன்னதாகவே தெரியும் என்பதால், அதற்கு ஏற்ப என்னைத் தயார்படுத்திக் கொள்வேன். ரசிகர்கள் இல்லாதது கவலை அளிக்கிறது.
வெளி மண்ணில் விளையாடும்போது ரசிகர்கள் ஆரவாரம் எழுப்புவது எனக்கு உத்வேகமாக இருக்கும். ஆனால், உடல்நிலை முக்கியம் என்பதால், அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும். இன்னும் சில மாதங்களில் ரசிகர்கள் மீண்டும் மைதானத்திற்கு திரும்புவார்கள். ஏனென்றால் அவர்கள் போட்டியை ரசிக்கக் கூடியர்கள்’’ என்றார்.
சர்வதேச கால்பந்தில் தேசிய அணிக்காக 100 கோல்களை கடக்கும் 2-வது வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஈரானின் அலி தயேய் 109 கோல்கள் அடித்துள்ளார்.
Next Story






