என் மலர்

  செய்திகள்

  ஜோகோவிச்
  X
  ஜோகோவிச்

  அமெரிக்க ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச், கிவிடோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், கிவிடோவா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
  நியூயார்க்:

  ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 29-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜான் லினர்ட் ஸ்ரப்பை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 6-3, 6-1 என்ற நேர்செட்டில் ஜான் லினர்ட் ஸ்ரப்பை ஊதித்தள்ளி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 43 நிமிடமே தேவைப்பட்டது.

  இந்த ஆண்டில் தோல்வியையே தொடாமல் தொடர்ச்சியாக 26-வது வெற்றியை பெற்ற ஜோகோவிச் கடின தரை போட்டியில் பதிவு செய்த 600-வது வெற்றி இதுவாகும். அடுத்த சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச், தரவரிசையில் 27-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டாவை சந்திக்கிறார்.

  பெட்ரா கிவிடோவா பந்தை ஆக்ரோஷமாக விளாசுகிறார்.


  மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் முதல் செட்டை இழந்தாலும் சரிவில் இருந்து மீண்டு வந்து 6-7 (4-7), 6-4, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்சின் அட்ரியன் மன்னரினோவை தோற்கடித்தும், தரவரிசையில் 32-வது இடத்தில் இருக்கும் குரோஷிய வீரர் போர்னா கோரிச் 6-7 (2-7), 6-4, 4-6, 7-5, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் 6-வது இடத்தில் உள்ள சிட்சிபாசை (கிரீஸ்) போராடி வீழ்த்தியும் 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர். போர்னா கோரிச் 4 மணி 36 நிமிட இழுபறிக்கு பிறகு வெற்றியை தனதாக்கினார்.

  மற்ற ஆட்டங்களில் டெனிஸ் ஷபோவலோவ் (கனடா), டேவினோவிச் போகினா (ஸ்பெயின்), டேவிட் கோபின் (பெல்ஜியம்), ஜோர்டான் தாம்சன் (ஆஸ்திரேலியா) ஆகியோர் தங்கள் தடையை வெற்றிகரமாக கடந்தனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-டெனிஸ் ஷபோவலோவ் (கனடா) இணை வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

  பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2018-ம் ஆண்டு சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-3, 6-7 (4-7), 6-2 என்ற செட் கணக்கில் உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக்கை விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் 2 முறை விம்பிள்டன் சாம்பியனான பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை தோற்கடித்தார். இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் அன் லியை வீழ்த்தினார்.

  பெட்ரா மார்டிச் (குரோஷியா), புதின்சேவா (கஜகஸ்தான்), ஜெனிபர் பிராடி (அமெரிக்கா), செல்பி ரோஜர்ஸ் (அமெரிக்கா), அனெட் கோன்டாவிட் (எஸ்தோனியா) ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றியை ருசித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.
  Next Story
  ×