என் மலர்
செய்திகள்

இங்கிலாந்து-பாகிஸ்தான் டெஸ்ட்
சவுத்தாம்ப்டன் டெஸ்ட்: பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிஸ்சில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது.
சவுத்தாம்ப்டன்:
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி டாம் சிப்லி மற்றும் ரோரி பேர்ன்ஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோரி 6 ரன்களிலும் சிப்லி 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த கிராவ்லி சிறப்பாக விளையாடினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தபோது இறுதியாக ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த கிராவ்லி அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இரு வீரர்களும் சதம் கடந்தனர். கிராவ்லி இரட்டை சதம் அடித்தார். அவர் 267 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பட்லர் 152 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 583 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்ன்ங்சை ஆடத்தொடங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷாம் மசூத் 4 ரன்னிலும் அபித் அலி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்துவந்த பாபர் அசாம் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், டெஸ்ட் போட்டியின் 3 ஆம் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது களத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டர் அசார் அலி
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசி பாகிஸ்தான் வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்திய போதும் அசார் அலி தனித்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
சிறப்பாக விளையாடிய அசார் அலி சதம் கடந்தார். ஆனால் இங்கிலாந்து அணி வீரர்களின் பந்துவீச்சை மற்ற வீரர்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்தின் பந்து வீச்சில் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.
இறுதியாக பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் மட்டுமே எடுத்தது. அசார் அலி 141 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து 3 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை விட 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதையடுத்து 310 ரன்கள் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணி நாளை தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்க உள்ளது.
இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி 310 ரன்கள் முன்னிலையில் உள்ளதால் அந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.
Next Story






