search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    2014-ம் ஆண்டு இங்கிலாந்து தொடர் தான் திருப்பு முனை - விராட் கோலி சொல்கிறார்

    கிரிக்கெட் வாழ்க்கையில் 2014-ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஒரு மைல்கல் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சக வீரர் மயங்க் அகர்வாலுடன் நடந்த கலந்துரையாடலின் போது கூறியதாவது:-

    எனது கிரிக்கெட் வாழ்க்கையில் 2014-ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரை (10 இன்னிங்சில் வெறும் 134 ரன்) ஒரு மைல்கல் என்று சொல்வேன். எல்லோரும் சிறப்பாக அமையும் தொடரைத் தான் அவ்வாறு குறிப்பிடுவார்கள். ஆனால் எனக்கு மோசமாக அமைந்தாலும் அது தான் திருப்பம் தந்த தொடராகும். அதன் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரராக தொடர்ந்து பொறுமையுடன் விளையாடுவது மிகவும் கடினம் என்பதை புரிந்து கொண்டேன். அதைத் தான் நான் முதலில் சரி செய்ய வேண்டி இருந்தது. அதன் பிறகு எனது ஆட்டஅணுகுமுறையில் சில விஷயங்களை மாற்றிக் கொண்டேன். குறிப்பாக பேட்டிங் செய்யும் போது, இடுப்பு பகுதி சரியான நிலையில் இல்லை என்பதை உணர்ந்தேன். இங்கிலாந்து தொடருக்கு பிறகு சச்சின் தெண்டுல்கர், ரவிசாஸ்திரி ஆகியோர் எனக்கு பயனுள்ள ஆலோசனைகள் வழங்கினர்.

    வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது முன்னால் சென்று ஆடுவதன் முக்கியத்துவத்தை தெண்டுல்கர் உணர்த்தினார். இதே போல் ரவிசாஸ்திரி, களத்தில் கிரீசுக்கு வெளியே நின்றபடி பேட்டிங் செய்யும்படி யோசனை கூறினார். அதன் மூலம் வேகப்பந்து வீச்சை திறம்பட சமாளிக்க முடியும். அவுட் ஆவதில் பந்து வீச்சாளர்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொடுக்காமல் தடுக்க முடியும் என்று தெரிவித்தார். அவர் கூறியபடி தொடர்ந்து செயல்பட்டேன். அதற்கு நம்ப முடியாத முடிவுகள் கிடைத்தது. அது தான் அந்த ஆண்டின் இறுதியில் நடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் (4 டெஸ்டில் 4 சதத்துடன் 692 ரன்) எதிரொலித்தது. இங்கிலாந்து தொடர் மட்டும் இல்லை என்றால் அனேகமாக நான் ஒரே மாதிரியே விளையாடிக் கொண்டு இருந்திருப்பேன். டெஸ்ட் போட்டியில் எந்த ஒரு சூழ்நிலையிலும் முடிவை அறிய வேண்டும் என்று தான் விரும்புவேன்.

    இதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். கடைசி நாளில் 300 ரன்கள் தேவை என்றால் கூட, அந்த இலக்கை அடையும் நோக்கில் அடித்து ஆடலாம் என்று தான் வீரர்களிடம் சொல்வேன். ஒவ்வொரு பகுதியிலும் தலா 100 ரன் எடுக்கும் வியூகத்துடன் பேட்டிங்கை தொடருவோம். விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு சென்றாலோ அல்லது இனி சாத்தியமில்லை என்ற நிலை வந்தாலோ மட்டுமே டிராவுக்காக ஆடுவேன்.

    இவ்வாறு கோலி கூறினார்.
    Next Story
    ×