search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுனில் கவாஸ்கர்
    X
    சுனில் கவாஸ்கர்

    71-வது பிறந்த நாள்: கவாஸ்கருக்கு ஐ.சி.சி. வாழ்த்து

    71-வது பிறந்த நாளை கொண்டாடும் கவாஸ்கருக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), இந்திய கிரிக்கெட் வாரியம் ஆகியவை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனாக விளங்கியவருமான சுனில் கவாஸ்கருக்கு நேற்று 71-வது வயது பிறந்தது. இதையொட்டி கவாஸ்கருக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), இந்திய கிரிக்கெட் வாரியம் ஆகியவை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி. தனது வாழ்த்து செய்தியில், ‘டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன், டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் 3 முறை சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன், 2005-ம் ஆண்டு வரை டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்த சாதனையாளர், 100 கேட்ச்கள் செய்த முதல் இந்திய பீல்டர்’ என்று அவருக்கு புகழாரம் சூட்டியிருக்கிறது.

    1987-ம் ஆண்டில் கவாஸ்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற போது அவருக்கும், அவரது மனைவிக்கும் மும்பை வான்கடே மைதானத்தில் நிரந்தரமாக இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்து இருந்தது. இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்த இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்காக மும்பை வான்கடே ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்ட பிறகு இந்த இருக்கைகள் அவருக்கு வழங்கப்படவில்லை. கவனக்குறைவு காரணமாக நடந்த இந்த தவறை 9 ஆண்டுக்கு பிறகு உணர்ந்துள்ள மும்பை கிரிக்கெட் சங்கம் கவாஸ்கருக்கு மீண்டும் இரண்டு இருக்கைகள் வழங்கப்படும் என்றும், அவ்விரு இருக்கைகளும் மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் பாக்சில் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள கவாஸ்கர் ‘எனது பிறந்த நாளையொட்டி மும்பை கிரிக்கெட் சங்கம் இனிப்பான பரிசை வழங்கியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். 
    Next Story
    ×