search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வான் - கெய்ல்
    X
    சர்வான் - கெய்ல்

    கெய்லின் குற்றச்சாட்டுக்கு சர்வான் பதிலடி

    கொரோனாவை விட கொடியவர் என்று கூறிய கெய்லின் குற்றச்சாட்டுக்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சர்வான் பதிலடி கொடுத்துள்ளார்.
    ஜமைக்கா:

    வெஸ்ட் இண்டீஸ் அதிரடி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் அங்கு நடத்தப்படும் கரிபீயன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜமைக்கா தலவாஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த சீசனில் அவரை தக்க வைத்துக் கொள்ளாமல் ஜமைக்கா அணி அவரை விடுவித்தது. இதையடுத்து அவரை செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணி தேர்வு செய்தது. ஜமைக்கா அணியில் இருந்து தன்னை வெளியேற்றியதற்கு அந்த அணியின் பயிற்சியாளரும், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரருமான ராம்நரேஷ் சர்வான் தான் முக்கிய காரணம் என்று கெய்ல் குற்றம் சாட்டினார். கொரோனாவை விட கொடியவர் சர்வான், நம்ப வைத்து முதுகில் குத்தி விட்டார். அவர் ஒரு பாம்பு, முதிர்ச்சியற்றவர் என்று சகட்டு மேனிக்கு சர்வானை கெய்ல் திட்டித் தீர்த்தார். இந்த நிலையில் கெய்லின் குற்றச்சாட்டை மறுத்து சர்வான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ‘2020-ம் ஆண்டு சி.பி.எல். போட்டிக்கான ஜமைக்கா அணியில் இருந்து கெய்லை நீக்க எடுத்த முடிவில் எனது பங்கு எதுவும் கிடையாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். கெய்ல் வெளியிட்ட வீடியோ பதிவில் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி பலருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார். என்னைத்தான் குறி வைத்து அதிகமாக தாக்கியுள்ளார். ஆனாலும் என்னைத் தவிர அவர் களங்கம் ஏற்படுத்தியுள்ள மற்றவர்களின் நலன் காக்கவே இந்த விளக்கத்தை அளிக்கிறேன். நான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகம் ஆனதில் இருந்து கெய்லுடன் தான் இணைந்து நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அவரது அபார திறமை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அது மட்டுமின்றி அவர் எனது நெருங்கிய நண்பரும் ஆவார். ஆனால் அவரது இத்தகைய தவறான குற்றச்சாட்டுகள் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உதவி பயிற்சியாளராக பணியாற்றிய போது தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நான் பல்வேறு வழிகளில் முயன்றதாக கூறியது, தனக்கு மதிப்பு அளிக்காத வகையில் வெளிநாட்டு வீரர்களை தூண்டியதாக கூறியது உள்ளிட்ட எந்த புகாரிலும் உண்மையில்லை. கெய்ல் சர்ச்சைகளில் சிக்கிய போதெல்லாம் அவருக்கு பக்கபலமாக நின்றவன் நான். துரதிர்ஷ்டவசமாக அவரது குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கிறது. புதிய அணியில் அவர் சிறப்பாக விளையாட வாழ்த்துகள்’.

    இவ்வாறு சர்வான் கூறியுள்ளார்.
    Next Story
    ×