search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வங்காளதேச வீரர்கள்
    X
    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வங்காளதேச வீரர்கள்

    U19 உலக கோப்பை பைனல்: 177 ரன்னில் சுருண்ட இந்தியா, வங்காளதேசத்தை கட்டுப்படுத்தி கோப்பையை வெல்லுமா?

    U19 உலக கோப்பை இறுதி போட்டியில் வங்காளதேச அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா 177 ரன்னில் சுருண்டது.
    13-வது ஜூனியர்  (19 வயதுக்கு உட்பட்டோர்)  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நடைபெற்று வருகிறது.  இதில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியாவின் ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வங்காளதேச அணியின் தொடக்க பந்து வீச்சாளர்களான ஷொரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப் ஆகியோர் துல்லியமாக ‘குட் லெந்த்’ பகுதியில் சீராக பந்தை பிட்ச் செய்தனர்.

    ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் ரன்கள் குவிக்க திணறினர். இந்தியாவின் ஸ்கோர் மிகவும் மந்தமான நிலையில் உயர்ந்தது. முதல் ஐந்து ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. 7-வது ஓவரை அவிஷேக் தாஸ் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் சக்சேனா ஆட்டமிழந்தார். அவர் 17 பந்திலவ் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

    2-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. இந்தியா முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்தது. 15 ஓவரில் 44 ரன்கள் எடுத்தது. இந்தியா 16.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது.

    ஓவர் செல்லசெல்ல ஜெய்ஸ்வால் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். 25 ஓவரில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இந்தியாவின் ஸ்கோர் 250 ரன்கள் எட்டும் நிலை இருந்தது.

    ஜெய்ஸ்வால் 89 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். இந்தியாவின் ஸ்கோர் 29 ஓவரில் 103 ரன்னாக இருக்கும்போது திலக் வர்மா ஆட்டம் இழந்தார். அவர் 65 பந்தில் 38 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த கேப்டன் பிரிமர் கார்க் 7 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.  இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

    4-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் த்ருவ் ஜுரேல் ஜோடி சேர்ந்தார். ஜெய்ஸ்வால் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். 40-வது ஓவரை ஷொரிபுல் இஸ்லாம் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜெய்ஸ்வால் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 121 பந்தில் 88 ரன்கள் சேர்த்தார். அடுத்த பந்தில் வீர் ரன்ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது இந்தியா 40 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது.

    அத்துடன் இந்தியாவின் ஸ்கோர் சீர்குலைய ஆரம்பித்தது. ஜுரேல் 22 ரன்னில் ரன்அவுட் ஆனார். ஆன்கோலெகர் 3 ரன்னிலும், பிஷ்னோய் 2 ரன்னிலும் வெளியெறினர். இதனால் இந்தியா 200 ரன்னை எட்டுவதே சந்தேகமாக இருந்தது.

    கடைசி விக்கெட்டாக மிஷ்ரா 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இந்தியா 47.2 ஓவரில் 177 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. வங்காளதேச அணியின் அவிஷேக் தாஸ் 3 விக்கெட்டும், ஷொரிபுல் இஸ்லாம், ஹசன் சாகிப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×