என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம்
    X
    நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம்

    3-வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்துவோம்- நியூசிலாந்து கேப்டன் நம்பிக்கை

    3-வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்துவோம் என்று நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

    ஆக்லாந்து:

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியஅணி தோற்று தொடரை இழந்தது.

    ஆக்லாந்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன் எடுத்தது.

    குப்தில் 79 ரன்னும் (8 பவுண்டரி, 3 சிக்சர்), முன்னாள் கேப்டன் டெய்லர் 73 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். யசுவேந்திர சாஹல் 3 விக்கெட்டும், ‌ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 274 ரன் இலக்குடன் இந்திய அணி பின்னர் களம் இறங்கியது.

    நியூசிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் 22 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

    ஜடேஜா அதிகபட்சமாக 55 ரன்னும் (2 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யர் 52 ரன்னும் (7 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். பென்னட், சவுத்தி, ஜேமிசன், கிராண்ட்கோம் தலா 2 விக்கெட்டும், நீசம் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்திய அணி ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் 347 ரன்குவித்து தோற்றது. தற்போது 274 ரன் இலக்கை எடுக்க முடியாமல் மீண்டும் பரிதாப நிலை அடைந்தது. இந்த தோல்வி மூலம் தொடரை இழந்தது.

    இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    விராட் கோலி

    இந்த ஆண்டில் 20 ஓவர் போட்டிகள் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. ஆனால், ஒரு நாள் ஆட்டங்கள் சரியாக அமையவில்லை. முதல் 2 ஆட்டமும் சிறப்பாகவே இருந்தது. ஜடேஜா, சைனி கடைசிவரை போராடினார்கள். சைனி சிறப்பாக பேட்டிங்கை செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. நியூசிலாந்து அணிக்கு கூடுதலாக ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெற்றி குறித்து நியூசிலாந்து அணியின் தற்காலிக கேப்டன் டாம் லாதம் கூறியதாவது:-

    இது ஒரு சிறந்த வெற்றியாகும். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். கடந்த ஆட்டத்தை விட இந்த போட்டியில் எங்களது திறமையில் முன்னேற்றம் காணப்பட்டது.

    3-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் ஓயிட் வாஷ் செய்ய விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    20 ஓவர் தொடரை 0-5 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. அந்த அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டம் வருகிற 11-ந் தேதி மவுண்ட் மவுக்கானுவில் நடக்கிறது.

    Next Story
    ×