search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் போட்டியில் அதிரடி காட்டிய கேஎல் ராகுல்
    X
    முதல் போட்டியில் அதிரடி காட்டிய கேஎல் ராகுல்

    2வது டி20 போட்டி - நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் அதிரடி தொடருமா?

    இந்தியா-நியூசிலாந்து மோதும் 2-வது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. இந்தியாவின் வெற்றிப் பயணம் தொடருமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    ஆக்லாந்து:

    நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

    ஆக்லாந்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 203 ரன்கள் குவித்த போதிலும் அதை இந்தியா ஒரு ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்து பிரமாதப்படுத்தியது. ஸ்ரேயாஸ் அய்யர் (58 ரன்), விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் (56 ரன்), கேப்டன் விராட் கோலி (45 ரன்) பேட்டிங்கில் அசத்தினர்.

    அதேபோல், இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவை (4 ஓவரில் 31 ரன்) தவிர மற்ற அனைத்து பவுலர்களும் ஓவருக்கு சராசரி 8 ரன்களுக்கு மேலாக விட்டுக்கொடுத்திருந்தனர். மற்றபடி வெற்றி நடையை தொடர்வதில் இந்திய வீரர்கள் தீவிரமாக உள்ளனர். இன்றைய ஆட்டத்திலும் இந்திய ரசிகர் பட்டாளம் கணிசமாக குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே இந்திய வீரர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிப்பதாக அமையும்.

    நியூசிலாந்து அணியில் பேட்ஸ்மேன்கள் காலின் முன்ரோ, கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் அரைசதம் அடித்த போதிலும், பந்து வீச்சில் சொதப்பியதால் அவர்களால் 200 ரன்களுக்கு மேல் எடுத்தும் அதை வெற்றி இலக்காக மாற்ற முடியவில்லை.

    இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி அதே ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வெல்லும் அணி 2-வது பேட்டிங் செய்யவே அதிக வாய்ப்பு உள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி அல்லது ஷர்துல் தாகூர்.

    நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), காலின் டி கிரான்ட்ஹோம், ராஸ் டெய்லர், டிம் செய்பெர்ட், மிட்செல் சான்ட்னெர் அல்லது டேரில் மிட்செல், சோதி, டிம் சவுதி, பிளேர் டிக்னெர், ஹாமிஷ் பென்னட்.

    இந்திய நேரப்படி பகல் 12.20 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    Next Story
    ×