
மும்பை வான்கடே மைதானத்தில் முதல் போட்டிக்காக ஆஸ்திரேலியா வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜஸ்டின் லாங்கருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதனால் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது குளர்காலம் நிலவி வருகிறது. இரவு 7 மணிக்கு மேல் அதிகப்படியான பனிப்பொழிவு இருக்கும். இதனால் பந்து ஈரப்பதமாகி பந்து வீச்சாளர்களுக்கு கடினமாகிவிடும்.
இதனால் போட்டியின்போது பனியின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளவதற்கு மெக்டொனால்டு நேற்றிரவு வான்கடே மைதானத்தில் உலா வந்துள்ளார். அப்போது பனியின் தாக்கம் எப்போது அதிகமாக இருக்கிறது, எப்போது குறைவாக இருக்கிறது என்பது குறித்து ஆராய்ந்ததாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான கேன் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் கூறுகையில் ‘‘எங்கள் அணி தலைமை பயிற்சியாளர் நேற்றிரவு முகாமில் இருந்து வெளியே வந்தார். அப்போது எந்த நேரத்தில் அதிகமான பனிப்பொழிவு இருக்கிறது என்பது குறித்து ஆராய்ந்தார். யாருக்கு தெரியும். ஒவ்வொருவரும் யூகிக்கிறார்கள். ஒவ்வொருவரும் பனியை சமாளிப்பதற்கு தயாராகுவார்கள் என்று நினைக்கிறேன்.
நாங்கள் இன்று ஈரப்பந்தில் பயிற்சி மேற்கொள்வோம். போட்டி நடக்கும் அன்று எப்படி இருக்கிறது என்பதை காண காத்திருக்கிறோம். இது ஒன்றும் புதிதல்ல. எங்களுடைய ஊரிலும் பனிப்பொழி இருக்கிறது’’ என்றார்.